search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தெலுங்கு மக்களை இழிவுபடுத்திய கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும்- அமர் பிரசாத் ரெட்டி
    X

    தெலுங்கு மக்களை இழிவுபடுத்திய கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும்- அமர் பிரசாத் ரெட்டி

    • அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள் என்று கஸ்தூரி பேசியது சர்ச்சையானது.
    • என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர் என்று கஸ்தூரி ஆதங்கம்

    பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசும்போது "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யாருங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என பெயர் வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." எனப் பேசினார்.

    தெலுங்கு பேசுபவர்களை நடிகை கஸ்தூரி இழிவாக பேசியதாக சர்ச்சை வெடிக்க, இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் விளக்கம் அளித்தார்.

    அப்போது பேசிய அவர், தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. தனது பேச்சை திரித்து பொய் பிரச்சாரம் செய்கின்றனர். தெலுங்கு இனம், தெலுங்கு மக்கள் என்ற சொல்லை நான் கூறவில்லை. தெலுங்கு மக்களை நான் மிகவும் மதிப்பவள். என் பிள்ளைகளும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியையும் படிக்கின்றனர்.

    நான் தமிழச்சி என்றாலும், தெலுங்கு மொழியையும் மதிப்பவள். என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் தெலுங்கு மக்களை இழிவாக பேசிய நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக பிரமுகரான அமர் பிரசாத் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "தெலுங்கு சமூகத்தின் உணர்வுகளை அவமரியாதை செய்யவோ அல்லது புண்படுத்தவோ துணிந்தால், கடுமையான விளைவுகளை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும், குறிப்பாக தமிழக அரசியல் சூழலில். தெலுங்கு சமூகத்தின் பெருமை மற்றும் மதிப்புகள் தமிழ்நாட்டின் பாரம்பரியத்துடன் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளன. மேலும் எங்கள் கவுரவத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்.

    என் தோழி நடிகை கஸ்தூரியின் கருத்து எல்லை மீறிவிட்டது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். எந்த வித அவமரியாதையையும் தெலுங்கு சமூகம் பொறுத்துக்கொள்ளாது" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×