என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கச்சத்தீவை மீட்கக்கோரி தனித்தீர்மானம்... வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி
    X

    கச்சத்தீவை மீட்கக்கோரி தனித்தீர்மானம்... வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி

    • 97 இந்திய மீனவர்கள் சிறையில் உள்ளதாக பாராளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
    • தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர்.

    சென்னை:

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக முன் வைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெறுவதற்கான அரசின் தனித் தீர்மானத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களை போக்கிடவும் கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும்.

    இதனை கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத் தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வேறு மாநில மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டால் ஒன்றிய அரசு இப்படிதான் நடக்குமா?

    2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் ஒரு மீனவர்கள் கூட கைது செய்யப்படமாட்டார்கள் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் 97 இந்திய மீனவர்கள் சிறையில் உள்ளதாக பாராளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

    அரசு முறைப் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் மோடி இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டு கொண்டுவர வேண்டுமென்றும் இந்த பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்றார்.

    இதனை தொடர்ந்து தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். அப்போது, கச்சத்தீவை மீட்பதற்கான உறுதியான நடவடிக்கையை பிரதமர் மோடி எடுப்பார் என்று நம்புகிறேன். புயல், சூறாவளிக்கு அஞ்சி வாழும் மீனவர்கள் தற்போது இலங்கை கடற்படைக்கும் அஞ்சி வாழும் நிலை உள்ளதாக ம.ம.க. உறுப்பினர் அப்துல் சமது பேசினார்.

    இதனிடையே கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு தெரிவிக்கப்பட்டு தான் கச்சத்தீவு கொடுப்பட்டது என்பது வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், கலைஞருக்கு இது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை நான் விடுகிறேன் என்று கூறினார்.

    இதனை தொடர்ந்து அமைச்சர்கள் பலரும் வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தனர். அதனை தொடர்ந்து தமிழக மீனவர்களின் உணர்வுகளுக்கு துணை நிற்பதால் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக பா.ஜ.க. அறிவித்தது.

    Next Story
    ×