என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 பேர் கொலை- பெண் சாராய வியாபாரிகளுக்கு தொடர்பு என புகார் சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 பேர் கொலை- பெண் சாராய வியாபாரிகளுக்கு தொடர்பு என புகார்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/15/9335874-mayiladuthurai.webp)
சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 பேர் கொலை- பெண் சாராய வியாபாரிகளுக்கு தொடர்பு என புகார்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- முட்டம் பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது.
- சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள முட்டம் வடக்கு தெருவை சேர்ந்த முனுசாமி மகன்கள் மூவேந்தன் (வயது 29), தங்கதுரை (28) மற்றும் ராதா மகன் ராஜ்குமார்(34). இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்ட விரோதமாக தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுப்பட்டனர். இதனை தட்டி கேட்பவர்களை தாக்கி கொலை மிரட்டலும் விடுத்து வந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதன் காரணமாக 3 பேரின் சாராய விற்பனை கொடி கட்டி பறந்தது.
இதனிடையே கடந்த 11-ந்தேதி மதுவிலக்கு போலீசார் முட்டம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்ததோடு சாராய வியாபாரி ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் ராஜ்குமார் ஜாமினில் வெளியே வந்தார்.
அதன் பிறகும் சாராய விற்பனையை அவர்கள் நிறுத்தவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமார் ஆகியோர் திருட்டுதனமாக முட்டம் தெருவில் சாராயம் விற்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 17 வயது சிறுவன் ஏன் சாராயம் விற்பனை செய்கிறீர்கள் ? என தட்டி கேட்டார். இதில் ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேரும் ஆத்திரம் அடைந்து சிறுவனை தாக்கினர்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு அதே கிராமத்தை சேர்ந்த கல்யாண்குமார் மகன் ஹரிஷ் (25), உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் என்ஜீனியரிங் மாணவர் ஹரிசக்தி (20) ஆகிய 2 பேரும் உடனே வந்து சிறுவனை தாக்கியதற்காகவும், உடனே சாராய விற்பனையை நிறுத்த வேண்டும் என்றும் தட்டி கேட்டனர்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை சேர்ந்து கத்தியால் ஹரிஷ், ஹரிசக்தி ஆகியோரை சரமாரியாக பல இடங்களில் குத்தி விட்டு தப்பி ஓடினர். இந்த கொலை வெறி தாக்குதலில் பலத்த காயமடைந்த ஹரிஷ், ஹரிசக்தி 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடனே பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் ஹரிஷ், ஹரிசக்தி ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும். அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் என கூறி உறவினர்கள், பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். உடனே அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து தப்பி ஓடிய தங்கதுரை, ராஜ்குமார், மூவேந்தன் ஆகிய 3 பேரையும் உடனடியாக பெரம்பூர் போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து முட்டம் பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆஸ்பத்திரியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஆஸ்பத்திரியில் உறவினர்கள் திரண்டுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, இந்த இரட்டை கொலை சம்பவத்தில் 2 பெண் சாராய வியாபாரிகளுக்கு தொடர்பு உள்ளதால் அவர்களை செய்ய வலியுறுத்தி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.