search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    3-வது மொழியை கற்க விடாமல் செய்வது நவீன தீண்டாமையின் உச்சம்: எல்.முருகன்
    X

    3-வது மொழியை கற்க விடாமல் செய்வது நவீன தீண்டாமையின் உச்சம்: எல்.முருகன்

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் இந்த உரிமை மறுக்கப்பட வேண்டும்.
    • இளைஞர்களின் முன்னேற்றத்தில் அரசியல் செய்வதை தி.மு.க.வும், உதயநிதி ஸ்டாலினும் நிறுத்த வேண்டும்.

    சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியை ஒரு மொழியாக சேர்க்க வேண்டும் என்று நாங்கள் எந்த இடத்திலும் சொல்லவில்லை.

    3-வதாக ஒரு மொழியை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பது தான் புதிய கல்விக்கொள்கையின் நோக்கமாக இருக்கிறது.

    மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதி உள்ள 3 பக்க கடிதத்தில் விளக்கமாக சொல்லி இருக்கிறார்கள். நாம் தமிழகத்திற்கும் தமிழ் மொழிக்கும் எந்த அளவுக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறோம் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.

    உலகத்திலேயே தொன்மையான மொழி, பழமையான மொழி தமிழ் மொழி என்று பிரதமர் மோடி உலக நாடுகளிடம் போய் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

    பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு நாட்டிலும் திருவள்ளுவருக்கு கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று சொல்லி இருந்தோம். ஆட்சிக்கு வந்த 5 மாதங்களிலேயே 5 இடங்களில் ஆரம்பித்து உள்ளோம். கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி சிங்கப்பூரில் கலாச்சார மையத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் கல்வி திட்டங்களுக்கு மத்திய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் கிட்டத்தட்ட 5 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது,

    இதற்கு முழுமுதற்காரணம் ஸ்டாலின் அவர்களும், உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தான்.

    தமிழக மக்கள், தமிழக மாணவர்கள் குறிப்பாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை வஞ்சிக்கும் செயல்களை செய்துகொண்டிருப்பது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தான்.

    துணை முதலமைச்சரின் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள். முதலமைச்சரின் பேரன்கள் எங்கே படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 3-வதாக ஒரு மொழி இந்தி கற்றுக்கொடுக்கப்படுகிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 3-வதாக ஒரு மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது.

    அப்படி இருக்கும்போது அரசு பள்ளியில் படிக்கக்கூடிய ஏழை எளிய மக்கள், பட்டியலின மக்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும் தான் 3-வதாக ஒரு மொழியை கற்பிக்க மறுக்கப்படுகிறது. இது நவீன தீண்டாமையின் உச்சமாக இருக்கிறது.

    உன்னை திட்டினால் கூட தெரியாது. சிரித்துக்கொண்டே திட்டுவான். ஒரு மொழியை கற்றுக்கொள்ளும்போது அந்த மொழி மீது பற்றுதல் வரும். எப்படி தமிழ் மொழியை அதிகம் பேர் விரும்புகிறார்களோ அதே போல் இன்னொரு மொழியை கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு மொழியை கூடுதலாக கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது.

    ஏன் சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் பள்ளியில் கொடுக்கிறீர்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் இந்த உரிமை மறுக்கப்பட வேண்டும்.

    அதனால் 3 மொழி கல்வி என்பது வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றோர்கள் வரவேற்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கோலம்போட்டு 3-வது மொழி வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். புதிய தேசிய கல்விக்கொள்கை வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

    கல்வியில் விளையாடாதீர்கள். கல்வியில் அரசியல் செய்யாதீர்கள். இளைஞர்களின் முன்னேற்றத்தில் அரசியல் செய்வதை தி.மு.க.வும், உதயநிதி ஸ்டாலினும் நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

    Next Story
    ×