என் மலர்
தமிழ்நாடு
தரைப்பாலத்தை கடந்த போது வெள்ளத்தில் சிக்கிய பஸ்
- தரைப்பாலத்தின் மீது கிளியாற்று உபரி நீர் பெருக்கெடுத்து ஓடியது.
- கிராம மக்கள் அங்கு விரைந்து சென்றனர்.
மதுராந்தகம்:
வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மதுராந்தகம் ஏரிக்கு வரக்கூடிய நீர் முழுவதுமாக அப்படியே வெளியேற்றப்பட்டு கிளியாற்று வழியாக செல்கிறது.
இந்த நிலையில் தச்சூரிலிருந்து செங்கல்பட்டுக்கு 10-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு தனியார் பஸ் சகாய் நகர் என்ற இடத்தில் தரைப்பாலம் மீது சென்று கொண்டிருந்தது. அப்போது தரைப்பாலத்தின் மீது கிளியாற்று உபரி நீர் பெருக்கெடுத்து ஓடியது.
அந்த பாலத்தை கடந்து சென்ற போது வெள்ளப்பெருக்கில் பஸ் சிக்கியது. இதனால் பஸ் செல்ல முடியாமல் தத்தளித்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் தவித்தனர். உடனடியாக அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கயிறு கட்டி பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
ஆனாலும் வெள்ளப்பெருக்கு காரணத்தால் பஸ்சை வெளியே எடுக்க முடியவில்லை. பஸ் தண்ணீரிலேயே சிக்கி நிற்கிறது. தரைப்பாலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பவுஞ்சூரில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.