என் மலர்
தமிழ்நாடு
பரந்தூரில் சொந்த இடம், அரசியல் கட்சியுடன் தொடர்பு - விளக்கமளித்த ஜி ஸ்கொயர்
- மக்கள் நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த பரந்தூர் கிராமத்தில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகளில் தமிழ் நாடு அரசு மேற்கொண்டுள்ளது. விமான நிலையம் அமைக்கப்பட்டால், விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகள், நீர்நிலைகள் அழிந்து போகும் என்பதால், அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விமான நிலையம் அமையவுள்ள பரந்தூரில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் அதிகளவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பரந்தூரில் நிலம் உள்ளது மற்றும் அரசியல் கட்சியுடன் தொடர்பு இருப்பது குறித்து ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பரந்தூர் பகுதியில் எந்த இடமும் இல்லை. எங்கள் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெர்ய ரியல் எஸ்டேட் டெவலப்பர். பரந்தூர் கிராமத்தில் தனிநபர் மற்றும் அரசியல் காரணங்களுக்காக எங்கள் நிறுவனம் அதிகளவு நிலத்தை வைத்துள்ளதாக சிலர் தகவல் பரப்பி வருவதை செய்தி நிறுவனம் வாயிலாக அறிந்து கொண்டோம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் புதிய விமான நிலையம் அமைய இருக்கும் பரந்தூரில் எங்கள் நிறுவனத்திற்கு எந்த இடமும் இல்லை. மேலும், எங்கள் நிறுவனத்திற்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை.
ஆன்லைன் மற்றும் அச்சு ஊடகங்களில் பதிவிடும் முன் உறுதிப்படுத்தப்பட்ட அல்லது அதிகாரப்பூர்வ தகவல்களை நிறுவனத்திடம் இருந்து மட்டும் பயன்படுத்துமாறு பொது மக்கள் மற்றும் ஊடகத்தாருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
தனிநபர்கள் மற்றும் அரசியல் களத்தில் செயல்படுவோர் நிறுவனம் குறித்து போலி தகவல்களை பரப்பும் பட்சத்தில், நிறுவனத்தின் புகழை சட்டப்பூர்வமாக பாதுகாப்போம்," என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.