என் மலர்
தமிழ்நாடு
மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக குறைப்பு
- நீர் இருப்பு 89.09 டி.எம்.சி.யாக உள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 748 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.
சேலம்:
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வந்ததால் கடந்த 31-ந்தேதி மேட்டூர் அணை ஒரே ஆண்டில் 3-வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வருகின்ற தண்ணீரை விட, கூடுதலாக அணையில் இருந்து தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது.
கடந்த 3-ந்தேதி முதல் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 12,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வந்தது. நீர்வரத்தை விட தினமும் கூடுதலாக நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டே வந்தது.
நேற்று காலை 117.87 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 117.21 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 89.09 டி.எம்.சி.யாக உள்ளது.
இந்த நிலையில் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவை குறைக்க முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை முதல் நீரின் அளவை குறைத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். வழக்கம்போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 748 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.