என் மலர்
தமிழ்நாடு
ஒரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு... சு.வெங்கடேசன் எம்.பி. காட்டம்
- ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தார்.
- இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு
பாராளுமன்ற மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களில் உள்ள 4,120 சட்டசபை தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு திட்டமிட் டுள்ளது.
இதையடுத்து ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழுவை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி அமைத்தது. இந்தக் குழு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையை மத்திய மந்திரிசபை கடந்த செப்டம்பர் மாதம் ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அரசமைப்பு சட்ட (129-வது திருத்தம்) மசோதா 2024-வை மத்திய சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் 12 மணிக்கு மேல் தாக்கல் செய்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சட்டத்திருத்த மசோதாவை மத்திய சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்த பிறகு, இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப பரிந்துரை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். கூட்டுக்குழு பரிசீலனையின் போது அனைத்துக் கட்சிகளும் விரிவாக கருத்து கூறலாம் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில், கூட்டுகுழுவுக்கு அனுப்ப ஆதரவாக 269 எம்.பி.க்களும், எதிராக 198 எம்.பி.க்களும் வாக்களித்தனர். எனவே பெரும்பான்மை வாக்குப்படி மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப முடிவானது.
இந்நிலையில், ஒரு நாடு ஒரு தேர்தல் மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பும் வாக்கெடுப்பு தொடர்பாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கும் போது பாதி பேரின் இருக்கையில் தான் மின்னனு வாக்கு இயந்திரம் வேலை செய்தது. மீதி பேர் வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்தனர்.
ஒரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு, நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்தலை நடத்தப்போவதாக சட்டதிருத்தம் கொண்டுவருகிறது" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
ஒரே தேர்தல் …மக்களவையே முன்மாதிரி !மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கும் போது பாதி பேரின் இருக்கையில் தான் மின்னனு வாக்கு இயந்திரம் வேலை செய்தது.மீதி பேர் வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்தனர்.ஒரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு, நாடு முழுவதும் ஒரே… pic.twitter.com/gyOvq2h8qz
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 17, 2024