search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருக்குறளை கூறி தமிழகத்தை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறார் நிர்மலா சீதாராமன்- மு.க.ஸ்டாலின் விமர்சனம்
    X

    திருக்குறளை கூறி தமிழகத்தை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறார் நிர்மலா சீதாராமன்- மு.க.ஸ்டாலின் விமர்சனம்

    • தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்பதால் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.
    • தமிழகத்திற்கு நீங்கள் நிதி அளிக்காமல் இருக்கலாம், நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம்.

    சென்னை ஆவடியில் மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கையை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    திமுக சார்பில் நடத்தப்படும் கண்டன பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நம்மை எதிர்த்து போட்டியிட்டவர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்காக அனைவரும் ஒன்று கூடியுள்ளோம். தமிழ்நாட்டு மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்.

    தமிழ்நாட்டை நாட்டின் முதல் மாநிலமாக வளர்த்தெடுத்து வருகிறோம். ரூ.10 லட்சம் கோடிக்கு அதிகமாக தனியார் முதலீடுகள் வருவதை உறுதி செய்துள்ளோம்.

    பொருளாதார குறியீடுகளில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

    வறுமை இல்லாத பட்டினி சாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதி, நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    தமிழ்நாடு அமைதியான பாதுகாப்பான மாநிலமாக உள்ளதால் தமிழகத்தில் பெண்கள் வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    மதவாத அரசியல் நடத்தி மக்களை ஒரே மயக்கத்தில் வைத்து அரசியல் ரீதியாக லாபம் அடையலாம் என பாஜக நினைக்கிறது.

    வளர்ச்சிக்கான நலத்திட்டங்களை செய்ய வேண்டும் என்ற நினைப்பே மத்திய அரசுக்கு வராது.

    மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த மாநிலங்களுக்கும் ஒன்றுமே இல்லை. பேரு தான் இந்தியாவுக்கான பட்ஜெட், ஆனால் உள்ளே எந்த திட்டங்களும் இல்லை.

    பட்ஜெட்டில் திருக்குறளை கூறினால் போதும் தமிழகத்தை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறார் மத்திய நிதி அமைச்சர்.

    140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 2 விழுக்காட்டினருக்கும் மட்டுமே வரிச்சலுகை.

    பீகாருக்கோ, ஆந்திராவுக்கோ நிதி ஒதுக்குவதில் பிரச்சினை இல்லை. தமிழகத்தை புறக்கணிப்பது ஏன் என்பது தான் கேள்வி.

    கடந்த பட்ஜெட்டில் ஆந்திரா ஆந்திரா என கூறிய நிதியமைச்சர் இந்த பட்ஜெட்டில் பீகார் பீகார் என கூறினார்.

    பட்ஜெட்டில் நாடு என்றால் வெறும் மண் அல்ல, மக்கள் என்ற தெலுங்கு மொழி கவிதையை நிர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டினார்.

    சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் மத்திய பட்ஜெட்டில் பீகார் பெயர் 6 முறை வந்தது. மதுரை எய்ம்ஸ், புதிய ரெயில் திட்டம், குடிநீர், வீடு என மத்திய அரசு எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×