என் மலர்
தமிழ்நாடு

மன்னார்குடி கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்: ராஜகோபால சுவாமிக்கு சாமரம் வீசிய செங்கமலம் யானை

- விழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகிற 10-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
- அன்றைய தினம் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாகும்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது.
விழாவின் முதல் நாளையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி திருமண கோலத்தில் பாமா ருக்மணியுடன் எழுந்தருளி கோவிலின் உள் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது கோவில் யானை செங்கமலம் வெண்சாமரத்தை தும்பிக்கையில் ஏந்தி ராஜகோபால சுவாமிக்கு வீசி, வணங்கியவாறு 3 முறை சுற்றி வந்தது. தொடர்ந்து, பன்னிரு ஆழ்வார்களும் இசை வாத்தியங்கள் முழங்க தனி நடையுடன் ராஜகோபால சுவாமி முன் தோன்றினர்.
வழக்கமாக பூர்வாங்க பூஜையின் போது பட்டாச்சாரியர்கள் தான் உற்சவர்களுக்கு சாமரம் வீசி வணங்குவர். ஆனால், கோவில் யானை சுவாமிக்கு சாமரம் வீசியது அங்கு திரண்டிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகிற 10-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
அன்றைய தினம் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.