search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கர்ப்பிணி உயிரை காப்பாற்ற அரியவகை ரத்தத்துடன் அரை மணி நேரம் முந்தி வந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில்
    X

    கர்ப்பிணி உயிரை காப்பாற்ற அரியவகை ரத்தத்துடன் அரை மணி நேரம் முந்தி வந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில்

    • அரிய வகை ரத்தம் தேவை என்ற தகவல் ரத்த தானம் செய்யும் குழுக்களில் பகிரப்பட்டது.
    • உலகில் 4 மில்லியன் பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்த அரிய வகை ரத்தம் உள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர்.

    அறுவை சிகிச்சைக்கு ரத்தம் தேவை என்பதால் கர்ப்பிணியை பரிசோதித்ததில் அவரது ரத்த வகை அரிய வகையான 'பம்பாய் ரத்த வகை' என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து கர்ப்பிணி அறுவை சிகிச்சைக்கு அரிய வகை ரத்தம் தேவை என்ற தகவல் ரத்த தானம் செய்யும் குழுக்களில் பகிரப்பட்டது.

    இதை பார்த்த ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆண்டிமடத்தை சேர்ந்த ரத்தக்கொடையாளர் ரஞ்சித்ராஜா தான் நடத்தி வரும் ரத்ததான குழு மூலம் இந்த அரிய ரத்த வகையான ஓ.எச். பிளஸ் வி.இ. ரத்த தானம் வழங்கும் கொடையாளர்கள் தேடுதல் நடந்தது. அப்போது விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒ.எச். பிளஸ். வி.இ. ரத்தத்தை ஒருவர் தானம் செய்தது தெரிய வந்தது. அதை அரியலுார் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து விழுப்புரம் டாக்டர் அசோக்குமார், ரத்ததான கொடையாளர் சந்துரு உதவியுடன் அவசர மருத்துவ சேவைக்காக விமானம், ரெயில், ஆம்புலன்ஸ் விரைந்து செல்ல ஏற்பாடு செய்யும் "பிப்டோ தமிழ் நாடு" அமைப்பினை நாடினர். அந்த அமைப்பின் வழிகாட்டுதலின்படி அரிய வகை ரத்தம் விழுப்புரம் ரெயில் நிலையத்திலிருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் விரைவாக கொண்டுவரப்பட்டது. உரிய நேரத்தில் ரத்தத்தை கொண்டு வந்து கர்ப்பிணிக்கு செலுத்த ஏதுவாக அரியவகை ரத்ததுடன் எதிர் திசையில் வரும் ரெயில்களுக்காக நிறுத்தாமல் வழக்கமான பயண நேரத்தை விட 30 நிமிடம் முன்னதாக பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் விரைந்து வந்து அரியலுார் ரெயில் நிலையத்தை அடைந்தது.

    அங்கிருந்து மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லபட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு தாயும், பெண் குழந்தையும் நலமுடன் இருப்பதாக அரசு டாக்டர்கள் கூறியதையடுத்து ரத்ததான குழுவினர் மகிழ்ந்தனர். அரியலுார் அரசு மருத்துவமனையில் நடந்த மனித நேய மிக்க இந்த செயலை அனைவரும் பாராட்டினர்.

    ரத்தம் வழங்கியவர்கள், விரைவாக கொண்டு செல்ல உதவியவர்கள், தன்னார்வலர்கள், அரசு டாக்டர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்னம் உள்ளது.

    கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட இந்த அரிய வகை ரத்தமான 'ஓஎச் பிளஸ் விஇ' வகை டாக்டர் ஒய்.எம். பெண்டே என்பவரால் 1952-ல் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்த புதிய ரத்த வகை 'பம்பாய் ரத்த வகை' என்றும் 'பம்பாய் ஓஎச் பிளஸ் விஇ' என்றும் மருத்துவத்துறையில் அழைக்கப்படுகிறது.

    உலகில் 4 மில்லியன் பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்த அரிய வகை ரத்தம் உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள சிலரிடம் தான் இந்த அரிய ரத்த வகை காணப்படுகிறது. இந்தியாவில் மொத்தமே 7 ஆயிரத்து 500 பேருக்கும் குறைவாகவே இந்த ரத்த வகை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×