search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மன்மோகன் சிங் மரணம்: தலைவர்கள் இரங்கல்
    X

    மன்மோகன் சிங் மரணம்: தலைவர்கள் இரங்கல்

    • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவால் மிகுந்த வேதனை அடைந்தேன்.
    • அவரின் நிதிக் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைத்தன.

    சென்னை:

    காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் நேற்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவால் மிகுந்த வேதனை அடைந்தேன். ஞானம், பணிவு மற்றும் நேர்மையின் உருவகமாக விளங்கிய அவர், இந்திய பொருளாதாரத்துக்கும் சவாலான காலங்களில் தேசத்தை வழிநடத்துவதற்கும் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கினார். மக்கள் பணிக்கான அவரது அர்ப்பணிப்பு என்றும் நினைவுகூரப்படும். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'எக்ஸ்' சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னராகவும், மத்திய நிதி மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார். அவரின் நிதிக் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைத்தன.

    ஒரு சிறந்த பொருளாதார நிபுணர், திறமையான நிர்வாகி மற்றும் ஒரு முன்மாதிரியான அரசியல்வாதி. அவரது பங்களிப்புகள் நாட்டின் வரலாற்றில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளன. அவரது மறைவு இந்திய நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், நிர்வாகிகளுக்கும், காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.


    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    உலகின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவரும், எனது பிரதமருமான மன்மோகன் சிங் அவர்கள் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தில்லியில் இன்றிரவு காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எனது வாழ்நாளில் நான் மறக்க முடியாத தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் மன்மோகன் சிங். 2004ல் அவரது தலைமையிலான அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது அவருக்கு வயது 72. எனக்கு அதில் பாதி வயது கூட இல்லை என்றாலும், என்னை மிகவும் மரியாதையுடன் நடத்தியவர். தேசிய ஊரக சுகாதார இயக்கம், புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், 108 அவசர ஊர்தி போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கான முன்மொழிவுகளை அவரிடம் முன்வைத்த போது, என்னை பாராட்டி ஊக்குவித்தவர். மருத்துவத் துறையில் 50 ஆண்டுகளில் செயல்படுத்த முடியாத திட்டங்களை 5 ஆண்டுகளில் செயல்படுத்திக் காட்டியதாக என்னைப் பாராட்டியவர். தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த அன்பு செலுத்தியவர்.

    பொதுவாக, பொருளாதார வல்லுநர்களாக இருப்பவர்களுக்கு பொருளாதார வளர்ச்சி மட்டுமே கண்ணுக்குத் தெரியும்; கிராமப்புற மக்களின் துயரங்களை புரிந்துகொள்ள முடியாது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், இதற்கு முற்றிலும் விதிவிலக்கானவர் முனைவர் மன்மோகன்சிங் அவர்கள். கிராமப்புற மக்களுக்கு அனைத்து வகையான சுகாதார வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர், அதற்கான திட்டங்களை செயல்படுத்துவதில் என்னை ஊக்குவித்தவர்.

    உலகின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவருடன் பணியாற்றியவன் என்ற பெருமிதத்தை எனக்கு வழங்கியவர் அவர். அவரது மறைவை ஏற்றுக்கொள்ள என் மனம் மறுக்கிறது. மன்மோகன் சிங் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பொருளாதார வல்லுநர்கள், சோனியா காந்தி அம்மையார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் அனைத்துநிலை தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



    தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.

    அவர் இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார். அவர் குறைவாகப் பேசினார், ஆனால் அதிகமாக செய்தார். இந்தியப் பொருளாதாரம் மற்றும் தேசத்திற்கான பிற உன்னத சேவைகளுக்கு அவரது ஈடு இணையற்ற பங்களிப்பு என்றென்றும் போற்றப்படும்.

    இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Next Story
    ×