என் மலர்
தமிழ்நாடு
பொங்கல் பண்டிகை- வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
- விலங்குகளை பார்வையிட வார விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை வருவது உண்டு.
- வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி இலவச வைபை வசதி செய்யப்பட்டுள்ளது.
வண்டலூர்:
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனவிலங்குகளான சிங்கம், புலி, சிறுத்தை, மனிதகுரங்கு, காண்டாமிருகம், பாலூட்டிகள், ஊர்வன போன்ற விலங்குகள் பாதுகாக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இங்கு விலங்குகளை பார்வையிட வார விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை வருவது உண்டு. மேலும் முக்கிய விழா காலங்கள் மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை யொட்டி ஏராளமான பார்வையாளர்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அவர்களின் வசதிக்காகவும், பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு சீட்டு பெறுவதற்காக 6 கவுண்டர்கள் உள்ளன. இதில் பணம் கொடுத்து டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். மேலும் பண பரிவர்த்தனை மட்டுமல்லாமல் யுபிஐ மூலமும் நுழைவு டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட் கவுண்டர்களில் பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மூங்கில் கம்புகள் கட்டி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி இலவச வைபை வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு வரக்கூடிய பயணிகள், தங்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு கூடுதலாக பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவையும் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் உயிரியல் பூங்காவின் உள்ளே செல்ல தனி நுழைவாயில், வெளியே வருவதற்கு தனி வழி என 2 வழிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பூங்காவை சுற்றி சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. 75-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் என்.சி.சி. மாணவர்கள் பாதுகாப்பிற்காக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை வண்டலூர் உயிரியல் பூங்கா உதவி இயக்குனர் மணிகண்ட பிரபு தெரிவித்தார்.