என் மலர்
தமிழ்நாடு
திருச்செங்கோடு அருகே தனியார் பஸ் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
- இருவரும் இன்று காலை ஒரே மோட்டார்சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டனர்.
- விபத்து குறித்து உடனடியாக எலச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார். இவரது மகன் ராகுல் (வயது 20). இவர் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தார்.
இதேபோல் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் பூந்தமிழன் (20). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இன்பர்மேஷன் டெக்னாலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவரும், ராகுலும் நண்பர்கள் ஆவர். இருவரும் இன்று காலை ஒரே மோட்டார்சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டனர். மாணவர் பூந்தமிழன் திருச்செங்கோட்டில் உள்ள கல்லூரியில் படித்து வருவதால் அவரை அங்கு இறக்கி விடுவதற்காக மோட்டார்சைக்கிளை ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி ஓட்டினார்கள்.
திருச்செங்கோடு அடுத்த எலச்சிப்பாளையம் நல்லாம்பாளையம் ரேசன் கடை அருகில் சாலையில் இருவரும் சென்றபோது மோட்டார்சைக்கிளும், திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரத்தை நோக்கி வந்த தனியார் பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் மாணவர்கள் ராகுல், பூந்தமிழன் இருவரும் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்து உடனடியாக எலச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டனர். மேலும் இது பற்றி போலீசார், மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் மாணவர்களின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதை பார்க்கும்போது நெஞ்சை கரைய வைத்தது.
மாணவர்கள் பலியானதை தொடர்ந்து அவர்கள் படித்த கல்லூரி சோகத்தில் மூழ்கியது.