என் மலர்
தமிழ்நாடு

எஸ்.ஏ. கலை, அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா: 350 மாணவர்கள் பட்டம் பெற்றனர்

- பட்டமளிப்பு விழாவில் இறையன்பு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
- சமூக அறிவுடன் கூடிய தலைமைப் பண்பைப் பெற முயல வேண்டும் என்று இறையன்பு தெரிவித்தார்.
பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை இணைச் செயலாளர் திரு. சு. கோபிநாத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரித் தாளாளர் திரு. ப. வெங்கடேஷ் ராஜா வாழ்த்துரை வழங்கினார்.
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் டாக்டர் இறையன்பு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 350 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்தார்.
விழாவில் பேசிய இறையன்பு அவர்கள், "பட்டங்கள் பல பெறினும் முதல் பட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. வாழ்வில் மேன்மையுற அனைவரும் தம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். சமூக அறிவுடன் கூடிய தலைமைப் பண்பைப் பெற முயல வேண்டும். நுண்ணறிவைப் பயன்படுத்தி வாழ்வில் உயர வேண்டும். அறிவைப் பயன்படுத்தப் பயன்படுத்தத்தான் அது மேன்மையுறும். மேலும் இளைஞர்கள் உணர்ச்சி மேலாண்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
தமிழ்த்துறைத் தலைவர் திரு. மா. விஜயகுமார் நன்றியுரை வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
பட்டமளிப்பு விழாவில் கல்லூரி இயக்குநர் முனைவர் வி. சாய் சத்யவதி, கல்லூரித் தாளாளர் திரு. ப. வெங்கடேஷ் ராஜா, எஸ். ஏ. பொறியியல் கல்லூரி இயக்குநர் திரு. டி. சபரிநாத், எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி ஆலோசகர் திரு. சாலிவாகனன், எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ். ராமச்சந்திரன் மற்றும் துறைத் தலைவர்கள் பங்கேற்றனர்