search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவையில் ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்படும் சாடிவயல் யானைகள் முகாம் விரைவில் திறப்பு
    X

    சாடிவயல் யானைகள் முகாமில் நடந்து வரும் பணிகளைபார்வையிட்ட வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு

    கோவையில் ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்படும் சாடிவயல் யானைகள் முகாம் விரைவில் திறப்பு

    • கும்கி யானைகள் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டன.
    • வனத்துறை மலையேற்றம் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களை சந்தித்து, இத்திட்டத்தில் உள்ள நிறை, குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    வடவள்ளி:

    கோவை வனக்கோட்டம் போளுவாம்பட்டி வனசரகத்துக்கு உட்பட்ட சாடிவயலில் கடந்த 2012-ம் ஆண்டு தற்காலிக யானைகள் முகாம் தொடங்கப்பட்டது.

    இந்த முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானைகள் மாவட்டத்தில் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகும் காட்டு யானைகளை விரட்ட பயன்படுத்தப்பட்டு வந்தன.

    கடந்த 2020-ம் ஆண்டு கும்கி யானைகள் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டன.

    அதன்பின்னர் மீண்டும் கும்கி யானைகள் கொண்டு வரப்படவில்லை. இதனிடையே மனித-விலங்கு முரண்பாடுகளை தடுக்கும் வகையில் 2023-ம் ஆண்டு சாடிவயலில் ரூ.8 கோடியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய யானைகள் முகாம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து.

    இதனை தொடர்ந்து 50 ஏக்கர் பரப்பளவில் புதிய யானைகள் முகாம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    18 புதிய யானைகள் பராமரிப்பு கூடம், 2 கரோல், 2 கி.மீ தொலைவுக்கு சோலார் மின்வேலி, 40 சோலார் விளக்குகள், யானைகள் குளிக்க தண்ணீர் தொட்டி, சிறிய மண் குட்டைகள், யானைகள் குளிப்பதற்கான ஷவர்கள், பாகன்கள், காவடிகள் தங்குவதற்கு 8 தங்கும் அறைகள், சி.சி.டி.வி. கேமரா, யானைகள் முகாமை சுற்றி அகழி ஆகிய பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்த நிலையில் சாடிவயலில் நடந்து வரும் பணிகளை வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறும்போது, புதிய யானைகள் முகாம் விரைவில் திறக்கப்படும். கோவை மற்றும் போளுவாம்பட்டி வனச்சரகங்களுக்குட்பட்ட பகுதியில், காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க, ரூ.7 கோடி மதிப்பில் பாதுகாப்பு வேலி அமைக்கும் திட்டத்தின் தற்போதைய நிலை அறிந்து, அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    முன்னதாக, வனத்துறை மலையேற்றம் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களை சந்தித்து, இத்திட்டத்தில் உள்ள நிறை, குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது, முதன்மை தலைமை வன பாதுகாவலர்கள் ராகேஷ் குமார், சீனிவாச ரெட்டி கோவை மண்டல வன பாதுகாவலர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×