என் மலர்
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் நடப்பது குடியாட்சிதான் - ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு செல்வப்பெருந்தகை பதிலடி
- தமிழ்நாட்டில் முடியாட்சி நடக்கவில்லை குடியாட்சிதான் நடக்கிறது.
- 1971 ஆம் ஆண்டே இந்தியாவில் மன்னராட்சி முடிவுக்கு வந்துவிட்டது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார்.
அந்நிகழ்வில் பேசிய அவர், "மன்னர் பரம்பரை போன்ற ஆதிக்கத்திற்கு தமிழகத்தில் இனி இடமில்லை. 2026ம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது. கருத்தியல் உள்ளவர் தான் தமிழகத்தில் முதல்வராக வேண்டும். தமிழகத்தில் மதம், ஜாதியை போல ஊழல் எதிர்ப்பை ஏன் யாரும் முன்னெடுக்கவில்லை" தெரிவித்தார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு தான் ஆதவ் அர்ஜுனா இவ்வாறு பேசியுள்ளார் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் இக்கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "தமிழ்நாட்டில் முடியாட்சி நடக்கவில்லை குடியாட்சிதான் நடக்கிறது. 1971 ஆம் ஆண்டே இந்தியாவில் மன்னராட்சி முடிவுக்கு வந்துவிட்டது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மேடையில் பேசி முடிவு எடுக்கும் விஷயம் இது அல்ல" என்று தெரிவித்தார்.