search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகாசி மேயர் வெளிநடப்பு
    X

    தி.மு.க. கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகாசி மேயர் வெளிநடப்பு

    • அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்த மேயர் சங்கீதா இன்பம் கூட்டம் நிறைவடைந்ததாக கூறி வெளியேறினார்.
    • கவுன்சிலர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டம் முடிந்து விட்டதாக கூறிவிட்டு மேயர் வெளிநடப்பு செய்தது தவறு என்றனர்.

    சிவகாசி:

    சிவகாசி மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் விக்னேஷ் பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் பல்வேறு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் ஒன்றான வீட்டு மனை அங்கீகாரம் வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அப்போது பேசிய 14-வது வார்டு கவுன்சிலர், எங்களது வார்டுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக என்னென்ன பணிகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    அப்போது அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்த மேயர் சங்கீதா இன்பம் கூட்டம் நிறைவடைந்ததாக கூறி வெளியேறினார். இருந்தபோதிலும் அரங்கில் இருந்த கவுன்சிலர்கள் மேயர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. துணை மேயர் மற்றும் ஆணையாளர் இணைந்து கூட்டத்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தான் கூட்டம் நடத்துகின்றனர். கவுன்சிலர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டம் முடிந்து விட்டதாக கூறிவிட்டு மேயர் வெளிநடப்பு செய்தது தவறு என்றனர்.

    இதற்கிடையே ஆணையாளர் பேசுகையில், கவுன்சிலர்கள் அளித்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். துணை மேயர், 4 மண்டல தலைவர்கள் உட்பட 34 கவுன்சிலர்கள் கூட்டத்தில் அமர்ந்து வெளியே செல்லாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது கவுன்சிலர்களை மதிக்காமல் மேயர் கூட்ட அரங்கை விட்டு வெளியே சென்றது தவறு என்றும், தொடர்ந்து இதுபோன்ற நடைபெறுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பினர்.

    இதற்கிடையே வீட்டுமனைக்கு அங்கீகாரம் வழங்கும் தீர்மானம் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதை நடைமுறைப்படுத்த மாட்டோம் என உறுதியளிக்கிறேன் என்று ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். ஆனாலும் அதனை ஆணையாளர் எழுத்துப்பூர்வமாக தரவேண்டும் என்று கூறி கவுன்சிலர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி கூட்டம் நடந்துகொண்டு இருக்கும்போதே மேயர் அரங்கத்தை விட்டு வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×