என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குன்னூரில் மருத்துவ குணம் கொண்ட சொடக்கு தக்காளி ஒரு கிலோ ரூ.1500-க்கு விற்பனை
    X

    குன்னூரில் மருத்துவ குணம் கொண்ட சொடக்கு தக்காளி ஒரு கிலோ ரூ.1500-க்கு விற்பனை

    • பெரும்பாலான மூலிகை செடிகள், பழங்களின் தன்மை குறித்து உள்ளூர்வாசிகளுக்கு சரிவர தெரிவதில்லை.
    • சொடக்கு தக்காளியின் செடியின் இலையை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் வலி, மூட்டு வலி பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் அரிய வகை மலர்கள், மூலிகை செடிகள் மற்றும் மருத்துவ குணம் மிகுந்த பழ வகைகள் அதிகளவில் உள்ளன. இதில் பெரும்பாலான மூலிகை செடிகள், பழங்களின் தன்மை குறித்து உள்ளூர்வாசிகளுக்கு சரிவர தெரிவதில்லை.

    ஆனால் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சமூக வலைத்தளங்கள் மூலம் நீலகிரியில் உள்ள மூலிகை செடிகள் மற்றும் பழங்களை கண்காணித்து அவற்றை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக மலையோர சாலைப்பகுதிகளில் மருத்துவ குணம் வாய்ந்த சொடக்கு தக்காளி பழங்கள் அதிகளவில் காய்த்து தொங்கி வருகின்றன. இந்தப் பழச்செடிகள் படர்ந்து வளரும் தன்மை கொண்டது. அவற்றின் விதைகள் காற்றின் மூலம் பறந்து சென்று ஆங்காங்கே முளைக்கும் தன்மைவாய்ந்தது.

    இதனை சிறுவர்கள் செடியில் இருந்து பறித்து நெற்றியில் வைத்து உடைக்கும்போது சொடக்கு போடுவது போல் சத்தம் கேட்கும். இதனால்தான் அந்த பழத்துக்கு சொடக்கு தக்காளி என்று பெயர் வந்தது. கோலிக்குண்டு அளவில் விளையும் சொடக்கு தக்காளி உடல் வலி நிவாரணியாகவும், உடல்களில் உள்ள சிறு கட்டிகளை அகற்றும் மருந்தாகவும் உள்ளது. இதனை சாப்பிட்டால் சிறுநீர் அதிக அளவில் வெளியேறும். புற்றுநோயைத் தடுக்கும் முக்கிய மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    சொடக்கு தக்காளியின் செடியின் இலையை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் வலி, மூட்டு வலி பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். சர்க்கரை நோய்க்கும் நல்ல பலனை கொடுக்கும். நீலகிரி மாவட்டத்தில் விளையும் சொடக்கு தக்காளி தற்போது ஆன்லைன் மூலம் கிலோ ரூ.3000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தேயிலை மற்றும் மலைத்தோட்ட காய்கறிகளுக்கு நடுவே வளர்ந்து நிற்கும் கீரை வகைகளை சேகரிக்கும் ஒரு சிலர் இந்த பழத்தை பறித்து டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஒரு கிலோ ரூ.1500-க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    எனவே உள்ளூர்வாசிகள் இனிமேலாவது மருத்துவ குணம் நிறைந்த சொடக்கு தக்காளி பழத்தை பயன்படுத்த வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×