என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது- இலங்கை கடற்படை அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது- இலங்கை கடற்படை அட்டூழியம்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/09/9104140-fishermen.webp)
ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது- இலங்கை கடற்படை அட்டூழியம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளனர்.
- தமிழகத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவில் சுமார் 20 விசைப்படகுகளை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு அருகே பாரம்பரிய இடத்தில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் பதட்டம் அடைந்த ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். இருந்த போதிலும் அதில் 2 படகுகளை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சுற்றி வளைத்தனர். அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற படகுகளையும் விரட்டியடித்தனர்.
இது எங்கள் நாட்டு எல்லை, இந்த பகுதியில் மீன்பிடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று கூறிய அவர்கள் எல்லை தாண்டியதாக ஜான் போஸ் மற்றும் சுதன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். அந்த படகுகளில் இருந்த ஜான் போஸ் (வயது 39), அந்தோணி இஸ்ரோஸ் (20), நிலாகரன் (44), நிகிதன் (16), ஜேசு பூங்காவனம் (42), அந்தோணி சந்தியா (19), கார்லோஸ் (21), நிஷாந்த் (38), டூவிஸ்டன் (21), அய்யாவு அந்தோணி டிமக் (34),
மற்றும் சுதன் என்பவரது படகில் இருந்த அருளானந்தம் (43), கெலஸ்டின் (55), அந்தோணி ஆரோன் (38) என மொத்தம் 14 மீனவர்களையும் சிறைபிடித்து அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை இரணத்தீவு கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தியதாகவும், எல்லைதாண்டி மீன் பிடித்ததாகவும் இலங்கை நீரியல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து கடந்த இரண்டு மாதங்களில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 70-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். அதிலும் கடந்த மாதம் 25-ந்தேதி ஒரே நாளில் 34 பேரை கைது செய்தனர். இதனை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த 34 பேரில் 32 பேரை இலங்கை அரசு விடுதலை செய்தது. ஆனால் அவர்களுக்கு பல லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கைது நடவடிக்கை சக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக மத்திய, மாநில அரசு ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடித்து செல்லும் இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை துறைமுகத்தில் நிறுத்தியுள்ளனர்.
இதில் ஏராளமான படகுகள் இயக்கப்படாமல் பழுதான நிலையில் உள்ளது. மேலும் அந்த படகுகளை தங்களது வாழ்வாதாரம் கருதி விடுவிக்க வேண்டும் என்றும் மீனவர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு இலங்கை அரசு செவி சாய்க்கவில்லை. அதற்கு மாறாக தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் 29-ந்தேதி எல்லைதாண்டியதாக கைதான 4 மீனவர்கள் சென்ற விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த படகு, அதில் இருந்த வலைகள், ஜி.பி.எஸ். கருவி, எந்திரங்கள், நங்கூரம் உள்ளிட்ட உபகரணங்களை ரூ.20 லட்சத்து 42 ஆயிரத்திற்கு இலங்கை அரசு நேற்று ஏலம் விட்டுள்ளது. இந்த தகவல் தமிழக மீனவர்கள் தலையில் இடியாய் இறங்கியுள்ளது.