search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டங்ஸ்டன் திட்ட ஒப்பந்தம் ரத்து என மத்திய அரசு அறிவிக்கும் வரை போராட வேண்டும்- சு.வெங்கடேசன்
    X

    டங்ஸ்டன் திட்ட ஒப்பந்தம் ரத்து என மத்திய அரசு அறிவிக்கும் வரை போராட வேண்டும்- சு.வெங்கடேசன்

    • வேதாந்தா நிறுவனத்தார் அவ்வளவு எளிதில் டங்ஸ்டன் திட்டத்தை விட்டு விட்டு போக மாட்டார்கள்.
    • பாராளுமன்றத்திற்குள் அதானி என்ற பெயரை கூற முடியவில்லை.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 3 நாட்கள் நடைபயண நிறைவு நிகழ்ச்சி பொதுக்கூட்டம் மேலூர் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்துகொண்டு பேசினார்.

    டங்ஸ்டன் தொடர்பாக பாராளுமன்றத்தில், சட்ட மன்றத்தில் பேசலாம். ஆனால் சம்பந்தப்பட்ட ஊர்களில் பேசினால் தான் டங்ஸ்டன் திட்டம் ரத்தாகும். டங்ஸ்டன் குறித்த முழுவிவரமும் மேலூரின் ஒவ்வொரு கிராமத்தினருக்கு தெரிந்தால் தான் திட்டம் ரத்தாகும். டங்ஸ்டன் குறித்து நமக்காக சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், அதிகாரிகள் பேசுவார்கள் என்பதை விட நமக்காக நாம் பேசினால் தான் அரசு செவி மடுக்கும்.

    வேதாந்தா நிறுவனத்தார் அவ்வளவு எளிதில் டங்ஸ்டன் திட்டத்தை விட்டு விட்டு போக மாட்டார்கள். இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுப்பார்கள். டங்ஸ்டன் பிரச்சனையில் நமக்கு மிகப்பெரிய நம்பிக்கை சட்டமன்ற தீர்மானம். இவ்வளவு நடந்த பிறகும் ஒன்றிய அரசு இப்போது வரை டங்ஸ்டன் தொடர்பாக வாய் திறக்கவில்லை.

    மத்திய அமைச்சரிடம் பேசும்போது, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதில் என்ன பிரச்சனை உள்ளது எனக்கேட்டேன். அதற்கு மத்திய மந்திரி மொத்தம் 5,000 ஏக்கரில் அரிட்டாபட்டி பாரம்பரிய சின்னங்கள் வெறும் 500 ஏக்கர் தான், மீதமுள்ள 4,500 ஏக்கரில் திட்டத்தை நிறைவேற்றினால் உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்கிறார்.

    மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளார்கள். டங்ஸ்டன் ஏல உத்தரவு ரத்து என மத்திய அரசு அவ்வளவு எளிதாக அறிவிக்க மாட்டார்கள். நம் எதிர்ப்பு நடவடிக்கைகள் போதாது. போராட்டம் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்தால் மட்டுமே டங்ஸ்டன் திட்டம் ரத்தாகும்.

    பாராளுமன்றத்திற்குள் அதானி என்ற பெயரை கூற முடியவில்லை. அதானி என பேசினால் மைக் ஆப் செய்யப்படுகிறது. பெரு முதலாளிகளின் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு வந்திருப்பது சாதாரண ஆபத்து அல்ல. மேலூர் மக்கள் பெருமுதலாளிகளின் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். மேலூர் போராட்டம் இந்தியளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் மேலூரின் சத்தம் கேட்டுக்கொண்டு உள்ளது.

    கூடங்குளம், மீத்தேன், ஸ்டெர்லைட் போன்று மதுரை மேலூர் ஆகிவிடக்கூடாது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் 14 பேர் சுடப்பட்டார்கள். அங்கெல்லாம் ஜனநாயக சக்திகள் கோட்டை விட்டு விட்டார்கள். கவனக்குறைவாக இருந்துவிட்டார்கள். மேலூரை எந்த தலைவர்களும் காப்பாற்ற மாட்டார்கள்.

    மக்கள், தலைவர்களை நம்ப வேண்டாம். மக்களே விழிப்புணர்வு பெற்று போராடுங்கள். டங்ஸ்டன் ஏலம் ஒப்பந்த அறிவிப்பு ரத்து என்பதை அறிவிக்கிற வரை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இந்த நாட்டின் அரசமைப்பு சட்டம், ஒன்றிய அரசு என எல்லாமே வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக உள்ளது. ஆனால் மக்கள் சக்தி வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக உள்ளது.

    ஒரு கேடயம் போல சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி. ஒப்பந்தம் ரத்து என மத்திய அரசு அறிவிக்கும் வரை போராட்டத்தை தொடர்ந்து நடத்தவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×