search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்த கட்டணம் திடீர் உயர்வு- பயணிகள் அதிர்ச்சி
    X

    சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்த கட்டணம் திடீர் உயர்வு- பயணிகள் அதிர்ச்சி

    • கார்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 80 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ. 85 ஆகவும் கார்களுக்கு அதிகபட்சம் 24 மணி நேரத்திற்கு ரூ. 525 ஆக இருந்தது ரூ.550 ஆகவும் உயர்ந்து உள்ளது.
    • இருசக்கர வாகனங்களும் இந்த கட்டண உயர்வுக்கு தப்பவில்லை.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி அடுக்குமாடி வாகன நிறுத்தம் செயல்பாட்டிற்கு வந்தது. அப்போது ஏற்கனவே இருந்த வாகன நிறுத்த கட்டணம் உயர்த்தப்பட்டது.

    மேலும் வாகனங்களை அங்கு நிறுத்தி விட்டு மீண்டும் வெளியே கொண்டு வருவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. இதற்கான வழிகள் தெளிவாக இல்லை என்று பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

    இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்த கட்டணம் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று முதல் மீண்டும் திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது. ரூ.5 முதல் ரூ.50 வரை அதிகரித்து இருக்கிறது.

    கார்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 80 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ. 85 ஆகவும் கார்களுக்கு அதிகபட்சம் 24 மணி நேரத்திற்கு ரூ. 525 ஆக இருந்தது ரூ.550 ஆகவும் உயர்ந்து உள்ளது. டெம்போ வேன்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.315 ஆக இருந்தது, தற்போது ரூ.330 ஆகவும் 24 மணி நேரத்திற்கு கட்டணம் ரூ.1,050 ஆக இருந்தது ரூ.1,100-ஆக அதிகரித்து உள்ளது. பஸ், லாரிகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.630 ஆக இருந்தது, தற்போது ரூ.660 ஆகவும் 24 மணி நேரத்திற்கான கட்டணம் ரூ.2,100 ஆக இருந்தது ரூ.2,205 ஆகவும் உள்ளது.

    இருசக்கர வாகனங்களும் இந்த கட்டண உயர்வுக்கு தப்பவில்லை. 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை கட்டண உயர்வு இல்லாமல், பழைய கட்டணமான ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை ஏற்கனவே ரூ.30 ஆக இருந்த கட்டணம் ரூ.35 ஆகவும், 24 மணி நேரத்திற்கான பழைய கட்டணம் ரூ.95 தற்போது ரூ.100 ஆகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×