search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சின்ன உடைப்பு கிராம மக்கள் காலி செய்ய ஒரு வார கால அவகாசம்- கலெக்டர் தகவல்
    X

    சின்ன உடைப்பு கிராம மக்கள் காலி செய்ய ஒரு வார கால அவகாசம்- கலெக்டர் தகவல்

    • நிலத்தை கையகப்படுத்துவற்கு ஏற்கனவே இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு விட்டது.
    • நிலம் கையகப்படுத்துவதை தடுக்க ஐகோர்ட்டில் மனு செய்ய உள்ளதாக சின்ன உடைப்பு கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.

    மதுரை:

    மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில எடுப்பு பிரச்சனை மதுரை சின்ன உடைப்பு ஊரில் உள்ள 164 வீடுகளுக்கு காலி செய்ய சொல்லி விமான நிலைய விரிவாக்க நில எடுப்பு தாசில்தார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக இப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிந்தனர்.

    இதையறிந்து பொதுமக்கள் பெரும் திரளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களிடம் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமையில் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகாயினி, தாசில்தார்கள் விஜயலட்சுமி, சுரேஷ் உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பொதுமக்கள் சார்பில் கவுன்சிலர் இன்குலாப் முனியாண்டி, மள்ளர் சேனை நிறுவனத் தலைவர் சோலை பழனிவேல் ராஜன் ஆகியோர் பேசினர். அப்போது வீடுகளை காலி செய்ய வருகிற சனிக்கிழமை வரை அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்று அதிகாரிகள் வரும் ஒரு வாரம் வரை அவகாசம் அளித்துள்ளனர். இதனால் இந்த பிரச்சினை சுமூகமாக முடிந்தது. போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சங்கீதா கூறுகையில், சின்ன உடைப்பு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும் இடத்தை காலி செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    நிலத்தை கையகப்படுத்துவற்கு ஏற்கனவே இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு விட்டது. கூடுதல் இழப்பீட்டு தொகை தொடர்பாக கிராம மக்கள் மனு அளிக்கவில்லை. நிலம் கையகப்படுத்தினால் பணம் மட்டுமே கொடுக்க முடியும், மாற்று நிலம் வழங்க முடியாது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு நிலம் வழங்க முடியும் என்றார்.

    இதனிடையே நிலம் கையகப்படுத்துவதை தடுக்க ஐகோர்ட்டில் மனு செய்ய உள்ளதாக சின்ன உடைப்பு கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×