search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க.விடம் கூட்டணிக்காக கோடிக்கணக்கில் பணம் கேட்டது யார்?  கே.பாலகிருஷ்ணன்
    X

    அ.தி.மு.க.விடம் கூட்டணிக்காக கோடிக்கணக்கில் பணம் கேட்டது யார்? கே.பாலகிருஷ்ணன்

    • பாராளுமன்றத்தில் பலவிதமான மோசமான திட்டங்களை கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர்.
    • தனிநபர் பிரச்சனைக்கு எல்லாம் தமிழக அரசு பொறுப்பு ஏற்க முடியாது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களிடம் அதானி ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்து தான் முதலீட்டை ஏற்றுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றம் அதானி, அவரது மருமகன் உட்பட 7 பேர் மீது பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இவ்வளவு பெரிய முறைகேடு நடந்ததை அங்குள்ள பங்கு சந்தை நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை இதனை கண்டு கொள்ளவில்லை. ஏன் இவ்வளவு பெரிய முறைகேட்டை இவர்கள் கண்டுபிடிக்கவில்லை. அமெரிக்க நிறுவனம் சொன்ன பின்பாவது மத்திய அரசு ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கும், எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அந்த நிறுவனம் சார்பில் பதில் கூறப்பட்டுள்ளது. இதனை மோடி அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

    அதானி என்பது முகம் தான், பின்னால் இருப்பது நரேந்திர மோடி தான். அவரது பினாமியாக இருப்பதால்தான் அதானி மீது எவ்வளவு பெரிய ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும் மோடி அரசாங்கம் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. அவர்கள் மீது சம்மன் அனுப்புவதில்லை. விசாரணைக்கு கூட அழைப்பது இல்லை. எனவே மத்திய அரசு உடனடியாக அதானியை கைது செய்ய வேண்டியும், முறையான விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.

    இந்த முறைகேடு பட்டியலில் தமிழ்நாடு அரசு இடம் பெற்றுள்ளது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, நாங்கள் அதானியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.

    தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை மத்திய அரசு வாங்கி, மாநிலங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். நான் தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்வது, தமிழ்நாடு பெயர் அந்தப் பட்டியலில் வந்துள்ளதால் இது சம்பந்தமாக தமிழக அரசு விசாரணையை தெளிவுபடுத்த வேண்டும். முழுமையான விவரங்கள் என்னவென்று தெரிவிக்க வேண்டும்.

    பாராளுமன்றத்தில் பலவிதமான மோசமான திட்டங்களை கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு பாராளுமன்றத்தில் அறுதி பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் கூட ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்டத்தை முன்மொழிவதாக கூறுகின்றனர்.

    ஏதோ ஒரு முறைகேடு மூலமாக பாராளுமன்றத்தில் இந்த சட்ட திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சதி திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற துடிக்கிறது.

    தமிழக சட்டமன்றம் விரைவில் கூட உள்ளது. தமிழக சட்டமன்றத்தை 3 அல்லது 4 நாட்கள் நடத்துவதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகள் தோழமைக் கட்சிகள் கருத்துக்களை பேசுவதற்கும், நாட்டில் உள்ள பல முக்கியமான பிரச்சனைகளை விவாதிப்பதற்கும் உரிய அவகாசத்துடன் சட்டமன்றத்தை நடத்த வேண்டும். முதலமைச்சரும் சபாநாயகரும் சட்டமன்றத்தை போதுமான அவகாசம் கொடுத்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் உள்ள தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பினை சட்டமன்றத்தில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

    பள்ளியில் ஆசிரியர்கள், நீதிமன்றத்தில் வக்கீல்கள், மருத்துவமனையில் டாக்டர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் வன்மையான கண்டனத்துக்குரியது. இது தனிமனித விரோதம் காரணமாக நடைபெறுகிறது. தனிநபர் பிரச்சனைக்கு எல்லாம் தமிழக அரசு பொறுப்பு ஏற்க முடியாது. போதைப்பொருள் ஒழிப்பதில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் இந்த விஷயத்தில் மெத்தனமாக உள்ளனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிக்கட்டான்பட்டியில் மத்திய அரசு 2000க்கும் மேற்பட்ட இடங்களில் கனிம வளங்களை எடுப்பதற்கு ஏலம் விட்டுள்ளது. அந்த இடத்தை பல்லுயிர் பாதுகாப்பு மையம் என்கின்ற முறையில் தமிழக அரசு 6 மாதத்திற்கு முன்பே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.

    2026 தேர்தலில் கூட்டணிகள் மாறும் என பலர் அவர்கள் யூகத்தின் அடிப்படையில் கூறி வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ளது. கூட்டணி மாறுவதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை .

    அ.தி.மு.க.வில் உள்ள தலைவர்களுக்கிடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் உள்ளது. அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் தோற்றத்துக்கு சரியான கூட்டணி இல்லாதது தான் காரணம் என கூறுகின்றனர்.

    மீண்டும் அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு சென்றால் அ.தி.மு.க. என்ற ஒரு கட்சியே இருக்காது.

    முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, கூட்டணி கட்சிகளுக்கு சீட்டு மற்றும் கோடிக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என பேசி உள்ளார். பொத்தாம் பொதுவாக சொல்லாமல் உங்களிடம் யார் பணம் கேட்டார்கள் என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

    யார் பணம் கேட்டார்கள்? நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்? என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சச்சிதானந்தம் எம்.பி. மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×