என் மலர்
தமிழ்நாடு

இந்தியில் கவிதை சொல்ல தெரியாததால் 3-ம் வகுப்பு மாணவனை தாக்கிய ஆசிரியை பணி நீக்கம்

- பள்ளி நிர்வாகம் தரப்பில் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
- பள்ளி நிர்வாகம் ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன் பள்ளியில் இந்தி ஆசிரியை ஒருவர் அதே பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் இந்தியில் கவிதை சொல்லுமாறு கூறியுள்ளார்.
ஆனால் மாணவனுக்கு இந்தி மொழியில் கவிதை சொல்ல தெரியவில்லை. இதைத் தொடர்ந்து இந்தி ஆசிரியை மாணவனை பலமுறை தாக்கியுள்ளார். அப்போது மாணவனின் சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக்கிய அவர் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மாணவன் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்து உள்ளார். இதற்கும் ஆசிரியை மாணவனை அடித்துள்ளார்.
இது தொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதன் பேரில் பள்ளி நிர்வாகம் தரப்பில் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்தி ஆசிரியையை அழைத்து பள்ளி நிர்வாகம் சார்பில் பேச்சு நடத்தப்பட்டது. அப்போது ஆசிரியை தனது தவறை உணர்ந்து பெற்றோரிடம் மன்னிப்பு கேட்பதற்கு தயாராக இருப்பதாகவும், மன்னிப்பு கடிதம் எழுதி கொடுப்பதாகவும் கூறி உள்ளார். ஆனால் மாணவனின் பெற்றோரோ ஆசிரியையை சந்திக்க விரும்பவில்லை என்றும், கல்வியாண்டு முடியும் வரையில் அவர் பணியில் தொடரக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தி ஆசிரியையை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.