search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாற்றாந்தாய் மனப்பான்மை ஒன்றிய அரசு நடந்து கொள்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது- திருச்சி சிவா
    X

    'மாற்றாந்தாய் மனப்பான்மை' ஒன்றிய அரசு நடந்து கொள்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது- திருச்சி சிவா

    • எய்ம்ஸ் மருத்துவமனை என்பது இன்னும் ஏட்டளவில் தான் இருக்கிறதே தவிர முன்னேற்றம் எதையும் காணவில்லை.
    • திராவிட முன்னேற்றக் கழகம் 200 இடங்களுக்கு மிகாமல் நிச்சயமாக வெற்றி பெறும்.

    சென்னையில் திமுக எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நடைபெற இருக்கிற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப இருக்கிறோம். தமிழ்நாடு மாநிலம் தொடர்ந்து ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த காலங்களில் நிதிக்குழுவின் பரிந்துரைகளும் பாரபட்சமாக இருந்தாலும் கூட பரிந்துரைத்த அளவிற்கு கூட தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    வரி பங்கீட்டு என்பதில் மாநில அரசுகளுக்கு எந்த அளவிற்கு பங்கீடு தர வேண்டுமோ அதில் குறிப்பாக மற்ற மாநிலங்களை விட கூட தமிழ்நாட்டிற்கு தரவில்லை. இப்போது இருக்கும் 41 என்பதை 50 விழுக்காடு தரப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்கனவே தமிழ்நாடு அரசின் சார்பில் நிதிக்குழுவிடம் சொல்லப்பட்டு விட்டது.

    எய்ம்ஸ் மருத்துவமனை என்பது இன்னும் ஏட்டளவில் தான் இருக்கிறதே தவிர முன்னேற்றம் எதையும் காணவில்லை. அதற்காக எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை.

    இயற்கை பேரிடரின்போது கேட்கப்பட்ட 39 ஆயிரம் கோடிக்கு மாறாக வெறும் 287 கோடி தான் தரப்பட்டு இருக்கிறது.

    ஒன்றிய அரசும் மாநில அரசும் சேர்ந்து செய்ய வேண்டிய திட்டங்களுக்கு ஒன்றிய அரசு தரவேண்டிய பங்குகளை எதையும் தருவதே இல்லை.

    மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு நடந்து கொள்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

    குறிப்பாக, எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களை இப்படி வஞ்சிப்பதன் மூலம் இந்த ஆட்சியின் செல்வாக்கை குறைக்கலாம் என்று அவர்கள் கருதலாம். ஆனால் அது இயலாது.

    அதே வேளையில் மாநில மக்களுக்கு எது தேவை என்று உணர்ந்து செயல்படுத்தக்கூடிய பொறுப்பும் கடமையும் மாநில அரசுக்கு தான் உண்டு.

    அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறபோது அதற்குரிய நியாயமான நிதி ஒன்றிய அரசு வழங்காமலேயே வருவதை இந்த முறை நாங்கள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் முக்கியத்துவம் கொடுத்து எழுப்புவோம்.

    அதானி பிரச்சனை உள்பட பல பிரச்சனைகள் உள்ளன. எல்லா பிரச்சனைகளும் நடைபெற உள்ள கூட்டத்தொடரில் எழுப்பப்படும்.

    நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் காரணத்தினால் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் உள்ள உறுப்பினர்கள் மாநில நலன் கருதி நாங்கள் கோரிக்கைகளாக எடுத்துரைப்போம்.

    மாநில தேவைகள், வஞ்சிக்கப்படுவது குறித்து முக்கியத்துவம் கொடுத்து பேசுவோம்.

    மாநில நலன்கள் குறித்தும், மாநில அரசு எப்படி ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படுகிறது என்பதை குறித்தும் இரு அவை உறுப்பனர்களும் எடுத்துரைப்போம்.

    திராவிட முன்னேற்றக் கழகம் 200 இடங்களுக்கு மிகாமல் நிச்சயமாக வெற்றி பெறும். மீண்டும் கழக ஆட்சி என்பதை விட 200 இடங்களுக்கு குறையாமல் பெற வேண்டும் என்பது எங்கள் இலக்கு என்று கூறினார்.

    Next Story
    ×