என் மலர்
தமிழ்நாடு

முன்னாள் எம்.எல்.ஏ. காரை விட மறுத்த சுங்கச்சாவடி ஊழியர்கள்- திடீர் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

- ஆத்திரமடைந்த கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
- திடீர் போராட்டத்தால் மதுரை-நத்தம் சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நத்தம்:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் (வயது 50). பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த இவர் தனது காரில் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். நத்தம் அருகே பரளிபுதூர் சுங்கச்சாவடியில் கார் நின்றது. அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் காருக்கு பணம் கேட்டுள்ளனர். அதற்கு கதிரவன் தான் முன்னாள் எம்.எல்.ஏ. என்று கூறியுள்ளார். இதற்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. விற்கு பாஸ் கிடையாது எனவும், பணம் கொடுங்கள் என்றும் கூறியுள்ளனர். இதனால் முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவனுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவலறிந்ததும் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவம் குறித்து சுங்கச்சாவடி ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படும் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் கோசலபூபதி, மணிகண்டன், அழகர் உள்ளிட்ட 3 பேரை நத்தம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் போராட்டத்தால் மதுரை-நத்தம் சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.