என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்- 5 டிகிரி செல்சியசாக குறைந்த வெப்பநிலை

    • விடுதிகள், தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது.
    • மலை கிராமங்களில் படர்ந்துள்ள உறைபனியால் பூண்டு, காய்கறிகள் சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை நிலவும் உறைபனி சீசன் காலத்தில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் தொடர்மழை பெய்து வந்த நிலையில் தற்போது உறைபனி சீசன் தொடங்கி உள்ளது.

    வழக்கத்தைவிட இந்த ஆண்டு கொடைக்கானலில் பருவமழை அதிக அளவு பெய்துள்ளது. இதன் காரணமாகவே உறைபனியின் தாக்கமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானல் நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, கீழ்பூமி உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி அதிக அளவில் காணப்படுகிறது.

    இதனால் கொடைக்கானல் ஏரிப்பகுதி, ஜிம்கானா, கீழ்பூமி, பிரையண்ட் பூங்கா ஆகிய பகுதிகளில் வெள்ளைக்கம்பளம் விரித்தது போல காணப்படுகிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் விதமாகவும், கொடைக்கானலுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் கொடைக்கானலில் நிலவும் இந்த குளுகுளு சீதோசனத்தை உற்சாகமாக ரசித்து வருகின்றனர். உள்ளூர் மக்கள் மற்றும் வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கை கடும் குளிர் காரணமாக பாதிக்கப்பட்ட போதிலும், சுற்றுலா பயணிகள் கம்பளி மற்றும் ஜெர்க்கின், சுவட்டர், மப்ளர், கையுறைகள் அணிந்து சுற்றுலா இடங்களை ரசித்து வருகின்றனர்.

    குறிப்பாக நட்சத்திர ஏரியில் அடர்ந்த பனிமூட்டத்திற்கு நடுவே செயற்கை நீரூற்றை ரசித்தவாறு படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். கடந்த வாரம் வரை சாரல் மழை பெய்து வந்த நிலையில் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். தற்போது படகு சவாரி மட்டுமின்றி, ஏரியைச் சுற்றி குதிரை சவாரி, சைக்கிள் ஓட்டியும் பொழுதை கழித்து வருகின்றனர்.

    கொடைக்கானல் பிரையண்ட் பார்க், குணாகுகை, மோயர் சதுக்கம், பைன் பாரஸ்ட் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று இரவு கொண்டாடப்பட உள்ள நிலையில் தேவாலயங்கள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுதிகள், தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது.

    மலை கிராமங்களில் படர்ந்துள்ள உறைபனியால் பூண்டு, காய்கறிகள் சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    Next Story
    ×