என் மலர்
தமிழ்நாடு
விஜய் தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து... ரவிக்குமார் எம்.பி. விமர்சனம்
- விஜய் கட்சி ஆரம்பித்திருப்பதே விசிக உடன் எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ...!
- தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து அழைப்பு விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
"எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கலந்து கொள்வது உறுதியானது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்பதாக கூறப்பட்டது. பின்னர் விழாவில் பங்கேற்கமாட்டேன் என திருமாவளவன் தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் விஜய் கலந்து கொள்ளும் விழாவில் கலந்து கொள்ள நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் திருமாவளவன் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த விழாவில் பங்கேற்காததற்கான காரணத்தை திருமாவளவன் நீண்ட அறிக்கையில் மூலம் விளக்கியிருந்தார்.
இருந்தபோதிலும் நேற்றைய புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசும்போது கூட்டணி கட்சி நெருக்கடியால் அவர் பங்கேற்வில்லை எனக் கூறினார்.
இந்த நிலையில் திருமாவளவன் பற்றி விஜய் கூறியதை விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "வி.சி.க. தலைவர் திருமாவளவன் விரிவாக அறிக்கை கொடுத்ததற்கு பிறகும் விஜய் எங்கள் தலைவரை பற்றி பேசியதை பார்த்தால் அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விசிக உடன் எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ என எண்ணத் தோன்றுகிறது.
தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து அழைப்பு விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது" எனத் தெரிவித்துள்ளார்.