என் மலர்
தமிழ்நாடு
நெல்லையில் வாலிபர் கொலை: காதலை கைவிட மறுத்ததால் கொன்றோம்- காதலியின் சகோதரர் வாக்குமூலம்
- எனது தங்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார்.
- இதனால் எனக்கு மனவேதனை ஏற்பட்டது.
நெல்லை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் விஜயகுமார் (வயது 25). இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிமெண்டு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும், நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் 24-வது தெருவை சேர்ந்த ஞானராஜ் மகள் ஜெனிபர் (23) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த ஜெனிபரின் சகோதரர் சிம்சன் என்ற புஷ்பராஜ் செல்போனில் பேசி விஜயகுமாரை நெல்லைக்கு வரவழைத்துள்ளார்.
நேற்று காலை ரெயிலில் நெல்லைக்கு வந்த விஜயகுமாரை சிம்சன் தனது நண்பரான பாளை அண்ணா நகரை சேர்ந்த சிவாவுடன் (35) சேர்ந்து அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்று அங்கு வைத்து கொலை செய்தார்.
இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிம்சனையும், சிவாவையும் கைது செய்து நடத்திய விசாரணையில் சிம்சன் கூறியதாவது:-
எனது தங்கையை நான் கஷ்டப்பட்டு வளர்த்து என்ஜினீயரிங் படிக்க வைத்தேன். பின்னர் அவர் நாகர்கோவிலில் வேலை பார்த்து வந்தார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் விஜயகுமாருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இதனை அறிந்து நாங்கள் அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டோம். இதனால் சமீபத்தில் ஜெனிபர் கள்ளக்குறிச்சியில் விஜயகுமாரை தேடி சென்றுவிட்டார்.
இதுகுறித்து பாளை மகளிர் போலீசில் சமாதானம் பேசி மீண்டும் ஜெனிபரை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டோம். ஆனாலும் எனது தங்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார். இதனால் எனக்கு மனவேதனை ஏற்பட்டது. எனது தங்கையை இவ்வளவு கஷ்டபடுத்தும் விஜயகுமாரை கண்டிக்க வேண்டும் என்று நினைத்து அவரை நைசாக பேசி நெல்லைக்கு வரவழைத்தேன்.
ஆனால் அவர் முன் எச்சரிக்கையாக அவரது நண்பர் ஒருவரை அழைத்து வந்திருந்தார். இதனால் அவரை நம்பும்படி பேசி கழட்டிவிட்டுவிட்டு விஜயகுமாரை மட்டும் அழைத்து வந்தேன். எனது நண்பன் சிவா வீட்டில் வைத்து சமாதானம் பேசினோம். அப்போது அவர் எங்களது சமாதானத்தை கேட்கவில்லை. காதலை கைவிட மறுத்தார். இதனால் நான் அவரை தாக்கினேன். ஆத்திரம் அதிகரித்ததில் நாங்கள் 2 பேரும் சேர்ந்து விஜயகுமாரை கொலை செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே விஜயகுமார் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இன்று காலை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.