என் மலர்
தமிழ்நாடு
கள்ளச்சாராய வழக்கில் மதுவிலக்கு பிரிவு என்ன செய்துகொண்டிருக்கிறது? - ஐகோர்ட் கேள்வி
- விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- வழக்கு விசாரணை ஜனவரி 6-ந்தேதி ஒத்திவைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 18 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தங்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராமன் அனைத்து வழக்குகளிலும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், இறுதி விசாரணைக்காக வழக்கை ஜனவரி 6-ந்தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது எதன் அடிப்படையில் ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு வழக்கறிஞர் இவர்கள் அனைவரும் கள்ளச்சாராயம் விற்று வருகின்றனர். விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதன் காரணமாக இவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதாக பதில் அளித்தார்.
இத்தனை ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருகிறது என்றால் மதுவிலக்கு போலீசார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசின் தோல்வியையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த அனைத்து மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 6-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.