search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நாடு கடந்து சென்ற நடனக்கலை- சீனாவில் பரத அரங்கேற்றம் நடத்திய சிறுமி
    X

    நாடு கடந்து சென்ற நடனக்கலை- சீனாவில் பரத அரங்கேற்றம் நடத்திய சிறுமி

    • முறையாக முழுமையாக பயிற்சி பெற்று சீனாவில் நிகழ்த்தப்பட்ட ஒரு மாணவியின் முதல் அரங்கேற்றம் இதுவாகும்.
    • லீ முசி 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜின் நடத்தும் நடன பள்ளியில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றார்.

    தமிழர்களின் பாரம்பரிய நடனமான பரத நாட்டியம், இந்தியாவின் கலாசார அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது. பழமையான பரதக்கலை, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பரவி வளர்ந்துள்ளது. தற்போது பரதக்கலை நாடு கடந்து சீனாவிலும் கால்பதித்துள்ளது.

    சீனாவை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி லீ முசி, பரதக்கலை பயின்று முதன் முதலாக சீனாவில் அரங்கேற்றம் நடத்தி உள்ளார். புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் லீலா சாம்சன் மற்றும் இந்திய தூதர்கள், ஏராளமான சீன ரசிகர்கள் முன்னிலையில் மாணவி லீ முசி அரங்கேற்றம் செய்தார்.

    பரதம் பயிலும் ஒருவர், குறிப்பிட்ட தேர்ச்சிக்குப் பின்னர், மேடையில் ஆசிரியர்கள், நிபுணர்கள், பார்வையாளர்கள் முன்னிலையில் முதன் முதலில் மேடையில் நடனம் ஆடுவதை அரங்கேற்றம் செய்தல் என்று குறிப்பிடுவார்கள். அரங்கேற்றம் நடத்திய பின்புதான், அவர்கள் தனியாக நிகழ்ச்சிகளில் நடனமாட முடியும் மற்றும் பயிற்சி வழங்க முடியும்.

    இதுகுறித்து இந்திய தூதரக கலாசார பொறுப்பாளர் டி.எஸ்.விவேகானந்த் கூறுகையில், "முறையாக முழுமையாக பயிற்சி பெற்று சீனாவில் நிகழ்த்தப்பட்ட ஒரு மாணவியின் முதல் அரங்கேற்றம் இதுவாகும்" என்றார்.

    லீ முசியின் அரங்கேற்றம் சீன ஆசிரியரால் பயிற்சி அளிக்கப்பட்டு சீனாவிலேயே முடிக்கப்பட்டது, இது முதல் முறையாகும்.

    'இது பரதநாட்டிய மரபு வரலாற்றில் ஒரு மைல்கல்' என்று லீக்கு பயிற்சி அளித்த நடன கலைஞர் ஜின் ஷான் ஷான் கூறினார். லீ முசி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜின் நடத்தும் நடன பள்ளியில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றார். ஜின் 1999-ல் டெல்லியில் தனது அரங்கேற்றத்தை நடத்திய பரத கலைஞர் ஆவார்.

    அரங்கேற்ற விழாவில் பல பிரபலங்கள், சீன மாணவர்கள் முன்னிலையில் பல வரலாற்று சிறப்புமிக்க பாடல்களுக்கு 2 மணி நேரத்திற்கு மேல், லீ பரதம் ஆடினார். இந்த மாத இறுதியில் சென்னையிலும் நடன நிகழ்ச்சி நடத்த இருக்கிறார் லீ.

    Next Story
    ×