search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஏவுகணை தாக்குதல்.. 2 நகரங்களுக்கு டார்கெட்.. உக்ரைன் மீது உக்கிரம் காட்டும் ரஷியா!
    X

    ஏவுகணை தாக்குதல்.. 2 நகரங்களுக்கு டார்கெட்.. உக்ரைன் மீது உக்கிரம் காட்டும் ரஷியா!

    • 18 மாதங்களாக நடைபெறும் போர் 540வது நாளை நெருங்கி இருக்கிறது
    • இந்த நகரின் வழியாகத்தான் உக்ரைனை விட்டு வெளியேறும் அகதிகள் போலந்து செல்கின்றனர்

    கடந்த பிப்ரவரி 2022ல் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது.

    இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளுதவியுடனும், ராணுவ தளவாட உதவியுடனும் உக்ரைன் தீவிரமாக ரஷியாவுடன் போர் செய்து வருகிறது. 18 மாதங்களாக நடைபெறும் இந்த போர் 540வது நாளை நெருங்கி வரும் நிலையில், இரு தரப்பிலும் பொருட்சேதங்களும், உயிர்சேதங்களும் பலமாக இருக்கின்றன.

    இந்நிலையில் உக்ரைனின் வடமேற்கு பகுதியில் உள்ள வோலின் (Volyn) மற்றும் மேற்கு பகுதியில் உள்ள ல்விவ் (Lviv) என 2 நகரங்கள் மீது ரஷியா வான்வழி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த இரு நகரங்களும் நேட்டோ உறுப்பினரான போலந்து நாட்டிற்கும் உக்ரைனுக்குமான எல்லையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    வடமேற்கிலுள்ள வோலின் பகுதியில் நடைபெற்ற தாக்குதல்களில் மூன்று பேர் உயிரிழந்திருக்கின்றனர். வோலின் பகுதியிலுள்ள லுட்ஸ்க் (Lutsk) பகுதியில் ஒரு தொழில் நிறுவன கட்டிடம் சேதமடைந்தது. பலர் தாக்குதலால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ல்விவ் பகுதியில் நடைபெற்ற தாக்குதல்களிலேயே பெரியதாக கருதப்படும் தற்போதைய தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர். இங்கு ரஷியாவால் ஏவப்பட்ட 6 ஏவுகணைகள் பல கட்டிடங்களை அழித்தன. இந்நகரத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தகர்க்கப்பட்டன. ஒரு மழலையர் விளையாட்டு மைதானம் சேதமானது.

    ல்விவ் மீது ஜூலை 2023 வரை ரஷியா தாக்குதல்கள் எதுவும் நடத்தவில்லை. இந்நகரத்திலிருந்துதான் ரஷிய-உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனை விட்டு வெளியேறும் அகதிகள் போலந்து நாட்டிற்கு செல்கின்றனர்.

    இந்த இரு நகரங்கள் மட்டுமின்றி வேறு சில பகுதிகளிலும் வான்வழி தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது. ரஷியா செலுத்திய 28 ஏவுகணைகளில் 16 ஏவுகணைகளை உக்ரைன் வானில் இடைமறித்து வீழ்த்தியுள்ளது.

    Next Story
    ×