என் மலர்tooltip icon

    உக்ரைன்

    • உக்ரைன் ரஷியா இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா பேச்சுவார்த்தை.
    • 30 நாள் போர் நிறுத்தம் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகியும் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை இன்னும் முடிவடையவில்லை. இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    30 நாள் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரண்டு நாடுகளிடம் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், ரஷிய அதிபர் புதினும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கான நிலையை வலுவாக்கிக் கொள்ள ரஷியா புதிய ராணுவ தாக்குதலை தொடங்க வாய்ப்புள்ளதாக உக்ரைன் கருதுகிறது.

    இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில் "ரஷியா பேச்சுவார்த்தையை இழுத்தடித்து, இன்னும் அதிகமான நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறது. புதின் வலுவான நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

    • இதில் 14 வயது சிறுமியும் அவளது பெற்றோரும் உயிரிழந்துள்ளனர்
    • இடிபாடுகளுக்கிடையில் காயடைந்தவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். உக்ரைனிய நகரமாக ஜபோரிஷ்யாவில் நேற்று இரவு ரஷிய டிரோன்கள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் உக்ரைனின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மீது நடந்த ரஷிய டிரோன் தாக்குதல்களில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜாபோரிஷ்யா மீது 10 முறை தாக்குதல் நடந்ததகவும், இதில் 14 வயது சிறுமியும் அவளது பெற்றோரும் உயிரிழந்துள்ளனர் என்றும் மேலும் ஒரு கைக்குழந்தை உட்பட 12 பேர் காயமடைந்தனர் என அந்நகரின் ஆளுநர் இவான் பெட்ரோவ் தெரிவித்துள்ளார். இடிபாடுகளுக்கிடையில் காயடைந்தவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

     

    மேலும் வடகிழக்கில் உள்ள சுமி (Sumy) பகுதியில் உள்ள கிராமத்தில் ரஷியா குறைந்தது 6 குண்டுகளை வீசியதாகவும், இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உக்ரைன் கிழக்கில் உள்ள டோன்ட்ஸ்க் (Donetsk) பகுதியில் நடந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என்றும் 9 பேர் காயமடைந்தனர் என்றும் அம்மகானை ஆளுநர் தெரிவித்தார்.

     

    இதனையடுத்து ரஷியாவின் வோரோனிஸ், பெலோகிராட் ரோஸ்டோவ் வோலோகிராட் உள்ளிட்ட பகுதிகள் மீது உக்ரைன் ஏவிய 47 டிரோன்களை இடைமறித்து அளித்ததாகவும், மொத்தம் 6 பேர் காயமடைந்ததாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக கடந்த வியாழக்கிழமை போர் நடைபெறும் எல்லையில் இருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஷியாவின் ஏங்கல்ஸ் ராணுவ விமானத் தளம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியிருந்தது.

    சோவியத் காலத்திலிருந்தே ஏங்கல்ஸ் தளத்தில், வைட் ஸ்வான்ஸ் என்று அழைக்கப்படும் டுபோலேவ் டு-160 அணுசக்தி திறன் கொண்ட கனரக குண்டுவீச்சு விமானங்கள் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலின் வீடியோவும் வைரலாகியது.

    2022 முதல் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

    முதற்கட்டமாக 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் ரஷியாவும், உக்ரைனும் பரஸ்பர டிரோன் தாக்குதல் நடத்தி வருவது நிலைமையை மோசமாக்கியுள்ளது. 

    • உக்ரைனுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு அதிபர் புதின் ஒப்புதல்.
    • இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றார்.

    கீவ்:

    உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

    சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. உக்ரைனுடனான போர் நிறுத்தத்துக்கு அதிபர் புதின் பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

    அப்போது பேசிய அதிபர் புதின், இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும். இந்த பிரச்சனையின் மூல காரணங்கள் நீக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு நடுவே உக்ரைன், ரஷியா பரஸ்பரம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளன.

    ரஷியாவின் வோல்கொகர்ட், வரோன்சி, பெல்ஹொரொட், ரோஸ்டவ், கர்ஸ்க் உள்ளிட்ட பிராந்தியங்களைக் குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. 126 டிரோன்கள் ஏவப்பட்ட நிலையில் இவை அனைத்தும் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

    அதேபோல், உக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. 178 டிரோன்கள் ஏவப்பட்ட நிலையில் இவற்றில் பெரும்பாலானவை நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைனும் தெரிவித்துள்ளது.

    • இந்தியப் பிரதமர், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர்கள் ரஷியா -உக்ரைன் போரை தீர்க்க நிறைய நேரம் ஒதுக்குகிறார்கள்.
    • புதினிடமிருந்து மிகவும் சூழ்ச்சிகரமான வார்த்தைகளை இப்போது நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம்.

    உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 4 வருடங்கள் முடிவடைந்த நிலையிலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.

    தற்போது டிரோன்கள் மூலம் கட்டமைப்புகள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. கடந்த ஒரு வாரத்திற்குள் உக்ரைன் மீது ரஷியாவும், ரஷியா மீது உக்ரைனும் பயங்கர டிரோன் தாக்குதல் நடத்தின.

    இதற்கிடையில் உக்ரைன் உடன் அமெரிக்கா 30 நாள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக் கொண்டது.

     

    இந்நிலையில் நேற்று மாஸ்கோவில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் சேர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷிய அதிபர் புதின், நம் அனைவருக்கும் போதுமான உள்நாட்டு விவகாரங்கள் உள்ளன. ஆனால் சீன அதிபர், இந்தியப் பிரதமர், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர்கள் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் இந்தப் பிரச்சினையைத்(ரஷியா -உக்ரைன் போரை) தீர்க்க நிறைய நேரம் ஒதுக்குகிறார்கள்.

    அதற்காக அவர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஏனெனில் இந்த செயல்பாடு ஒரு உன்னதமான பணியை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விரோதம் மற்றும் உயிர் இழப்பை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கம்.

    போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்கிறேன். விரைவில் இவ்விவகாரம் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் ஒரு தொலைபேசி உரையாடலை எதிர்நோக்கியுள்ளேன். உக்ரைன் படைகள் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ளனர். இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முன்னால் அங்கிருக்கும் படையினர் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும்.

    அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கான வலுவான புரிதல் ஏற்படுத்தப்பட வேண்டும். மொத்தத்தில் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தமானது நீண்ட கால அமைதிக்கு வித்திடுவதாக இருக்க வேண்டும். நெருக்கடியின் மூல காரணங்களை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

    அதிபர் புதின் போர் நிறுத்தத்துக்கு பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில் இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மாஸ்கோவில் புதினின் அறிக்கையை முழுமையற்றது. ஆனால் ரஷியா சரியானதைச் செய்யும். முன்மொழியப்பட்ட 30 நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளும் என்றும் தான் நம்புவதாகக் கூறினார்.

    இதற்கிடையே புதினின் போர் நிறுத்த கருத்துக்கள் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, புதினிடமிருந்து மிகவும் சூழ்ச்சிகரமான வார்த்தைகளை இப்போது நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். உண்மையில் அவர் இப்போது போர் நிறுத்தத்தை நிராகரிக்கத் தயாராகி வருகிறார்.

    இந்தப் போரைத் தொடர விரும்புவதாகவும், உக்ரேனியர்களைக் கொல்ல விரும்புவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் புதின் நேரடியாக சொல்ல பயப்படுகிறார்.

    அதனால்தான் மாஸ்கோவில் அவர்கள் போர் நிறுத்தத்திற்கான முன் நிபந்தனைகளை விதிக்கிறார். அந்த நிபந்தனைகள் போர் நிறுத்தத்தை சாத்தியமற்றதாக்கும் அல்லது முடிந்தவரை ஒத்திவைக்கும் என்பதே அவரது திட்டம் என்று தெரிவித்தார். 

    • அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்காவுக்கு அழைத்து வெள்ளை மாளிகையில் வைத்து வாக்குவாதம் செய்தார்.
    • உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நிறுத்தப்படுவதை தீய ஜெலென்ஸ்கி விரும்பவில்லை

    ரஷியா - உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஜோ பைடன் அமெரிக்க அதிபராக இருந்தவரை உக்ரைனுக்கு ஆயுதங்களை கொடுத்து ஆதரித்தார்.

    ஆனால் டொனால்டு டிரம்ப் ரஷியா பக்கம் சாய்த்துள்ளார். சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்காவுக்கு அழைத்து வெள்ளை மாளிகையில் வைத்து வாக்குவாதம் செய்தார்.

    இந்நிலையில் ஜெலென்ஸ்கிக்கு டொனால்டு டிரம்ப்பின் கூட்டாளி எலான் மஸ்க் பகிரங்க மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், எனது ஸ்டார்லிங்க் அமைப்பு உக்ரைன் ராணுவத்தின் முதுகெலும்பு. நான் அதை நிறுத்தினால், அவர்களின் முழு பாதுகாப்பு அமைப்பும் சரிந்துவிடும்.

    மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் உயிரிழப்புகள் மற்றும் காயங்களால் நான் சோர்வடைந்துள்ளேன். உக்ரைன் இந்தப் போரில் தோற்பது உறுதி. ஆனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நிறுத்தப்படுவதை தீய ஜெலென்ஸ்கி விரும்பவில்லை.

    தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஜெலென்ஸ்கி வேண்டுமென்றே அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தாமதப்படுத்துகிறார் என்று தெரிவித்துள்ளார்.

    • உக்ரைனின் டோனெட்ஸ்க், கார்கிவ் பகுதிகளில் ரஷியா தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 20 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

    கீவ்:

    உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடுத்த போர் 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இதில் இருதரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். காயமடைந்துள்ளனர்.

    இதற்கிடையே, உக்ரைனுக்கு முன்னாள் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ஆதரவளித்து ஆயுதம், நிதியுதவி வழங்கியது. ஆனால் டிரம்ப் தலைமையிலான அரசு உக்ரைனுக்கான ஆதரவில் இருந்து பின்வாங்கி வருகிறது. உக்ரைனுக்கான ராணுவ உதவியை டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு சமீபத்தில் நிறுத்தியது. உக்ரைனுக்கு அளித்துவந்த புலனாய்வு தகவலையும் நிறுத்துவது என அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், உக்ரைனில் ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. டோனெட்ஸ்க் பகுதியில் குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கார்கிவ் மற்றும் ஒடிசா பகுதிகளில் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் கடுமையாக தாக்கப்பட்டன.

    பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகம் ஒன்றின் மீது தாக்குதலை தொடுக்க பயன்படுத்தப்பட்டன.

    இதுதொடர்பாக, ஜெலன்ஸ்கி டெலிகிராம் பதிவில் வெளியிட்ட செய்தியில், மீட்புக்குழுவினரை இலக்காக கொண்டு ரஷியா மற்றொரு தாக்குதலை உள்நோக்கத்துடன் நடத்தியது. இதுபோன்ற தாக்குதல், ரஷியாவின் இலக்குகள் மாறவில்லை என எடுத்துக் காட்டுகின்றன என தெரிவித்தார்.

    • இந்த விஷயங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்
    • பிரதமர் மோடி குறைக்க ஒப்புக்கொண்டதாக டிரம்ப் தெரிவித்தார்.

    வரிவிதிப்பு சர்ச்சைக்கு மத்தியில் இந்தியா, ரஷியாவிடம் ஆயுதங்களை வாங்குவதற்கு அமெரிக்கா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

    ரஷியாவின் ஆயுதங்களை இந்தியா சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறினார்.

    இந்தியாவில் நடந்த தனியார் செய்தி நிறுவனத்தின் மாநாடு ஒன்றில் அவர் பேசியதாவது, இந்தியா வரலாற்று ரீதியாக ரஷியாவிடமிருந்து தனது இராணுவ உபகரணங்களில் பெரும் பகுதியை வாங்கியுள்ளது.  

    ரஷியாவிடம் இருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவதை நிறுத்த வேண்டும் - அமெரிக்கா கொடுத்த ஆஃபர்

    மேலும் டாலருக்கு மாற்றாக உலகளாவிய நாணயத்தை உருவாக்க பிரிக்ஸ் முயற்சிக்கிறது. இந்த பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா உள்ளது.

    இது அமெரிக்க-இந்திய உறவுகளை பலவீனப்படுத்துகிறது. இந்த வகையான விஷயங்கள் அமெரிக்கா - இந்தியா இடையே அன்பையும் பாசத்தையும் உருவாக்குவதில்லை.

    இந்த விஷயங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க பொருட்களுக்கான வரியை பிரதமர் மோடி குறைக்க ஒப்புக்கொண்டதாக டிரம்ப் நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் 13க்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்தன.
    • அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

    ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் இன்றுடன் (பிப்ரவரி 24) ஆம் தேதியுடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறது. ஐரோப்பிய யூனியனின் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிராக ரஷியா தங்கள் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தை கூறி ரஷியா 2022இல் போரை தொடங்கியது.

    இந்நிலையில் ரஷியா இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் மீது நடத்தியுள்ளது.

    உக்ரைன் அதிகாரிகளின் கூற்றுப்படி, நேற்று ஒரே நாளில் ரஷியா 267 ட்ரோன்களை ஏவியது. இது இதுவரை உக்ரைன் மீது நடந்தேறாத மிகப்பெரிய வான்வழித் தாக்குதலாகும்.

    இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் 13க்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்தன. அவற்றில் கார்கிவ், பொல்டாவா, சுமி, கீவ், செர்னிஹிவ், மைகோலைவ் மற்றும் ஒடெசா ஆகியவை அடங்கும்.

    உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் கூறுகையில், ரஷியா ஏவிய 267 ட்ரோன்களில் 138 இடைமறிக்கப்பட்டன. இருப்பினும், இந்த தாக்குதலின் போது மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் உடன் ஏவி, உக்ரைனின் ஐந்து நகரங்களில் ரஷியா சேதம் விளைவித்தது.

    இந்தத் தாக்குதலின் போது, உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு பல ரஷிய ட்ரோன்களை அழித்தது. உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் இந்த சம்பவத்தின் காணொளியை வெளியிட்டுள்ளது.

    முன்னதாக கடந்த சனிக்கிழமை இரவு உக்ரைனின் கிரிவி ரிஹ் நகரில் நடந்த மற்றொரு ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

    ரஷியாவின் தாக்குதலை உக்ரைன் அதிபர்ஜெலென்ஸ்கி கண்டித்துள்ளார். கடந்த வாரத்தில் மட்டும் ரஷியா 1,150 ட்ரோன்கள், 1,400 க்கும் மேற்பட்ட வான்வழி வெடிகுண்டுகள்  மற்றும் 35 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசியதாக அவர் தெரிவித்தார்.

    உக்ரைன் போருக்கு தீர்வு காண சவுதி அரேபியாவில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

    இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அழைக்கப்படவில்லை. இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. உக்ரைனை நேட்டோ நாடுகளுடன் சேர்த்தால் தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுப்பதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
    • போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு இல்லை என்றார் அதிபர் டிரம்ப்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிதியுதவி அளித்து வருகின்றன. இரு நாடுகள் இடையிலான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு போர்நிறுத்தம் குறித்த பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன. ஆனாலும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு இல்லை என டிரம்ப் தெரிவித்தது சர்ச்சையானது.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருக்கிறேன் என அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தலைநகர் கீவில் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    உக்ரைனில் அமைதி திரும்ப நான் எனது பதவியை விட்டுத் தரவேண்டும் என்றால் அதற்கு தயாராகவே இருக்கிறேன். உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் அதிபர் பதவியை விட்டு விலகத் தயாராக உள்ளேன்.

    உக்ரைனின் நிலைப்பாட்டை டிரம்ப் புரிந்துகொள்ள வேண்டும். ரஷியாவின் தாக்குதலால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, டிரம்ப் ரஷியாவிடம் இருந்து எங்களுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

    இந்தப் பிராந்தியத்தில் அமைதி திரும்ப உக்ரைனின் கூட்டாளியாக டிரம்ப் இருக்க வேண்டும். இதை டிரம்ப் புரிந்து கொள்வோர் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • போர் நிறுத்தம் குறித்து நாங்கள் இல்லாமல் ஆலோசிப்பதா?
    • பேச்சுவார்த்தை 4 மணி நேரம் நடந்தது.

    கீவ்:

    நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இப்போரை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். இதற்கிடையே சவுதி அரேபியாவில் நேற்று அமெரிக்கா, ரஷ்யா உயர் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் அமெரிக்கா வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபினியோ, ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் ஆகியோர் பங்கேற்றனர். பேச்சு வார்த்தைக்கு உக்ரைன் அழைக்கப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தை 4 மணி நேரம் நடந்தது.

    இதில் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், நல்லுறவை மேம்படுத்துவதற்கும் பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் துருக்கிக்கு சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்கா-ரஷியா இடையேயான பேச்சுவார்த்தை குறித்து கூறியதாவது:-

    சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்காததால் அதில் எடுக்கப்படும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு பேச்சு வார்த்தையும் நியாயமானதாக இருக்க வேண்டும்.

    பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்த துருக்கி உட்பட ஐரோப்பிய நாடுகள் இடம்பெற வேண்டும். எங்கள் முதுகுக்குப் பின்னால் யாரும் எதையும் முடிவு செய்யக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்.

    உக்ரைனில் போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து உக்ரைன் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது. சவுதி அரேபியாவுக்கு செல்ல முடிவு செய்திருந்தேன். ஆனால் அந்த பயணத்தை மார்ச் 10-ந்தேதி வரை ஒத்திவைத்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் ரஷிய அதிபர் புதினை இந்த மாதத்தில் சந்திப்பேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    • தற்போது ரஷியா - உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
    • ரஷ்யா ஏவிய 95 டிரோன்களை உக்ரைன் இராணுவம் சுட்டு வீழ்த்தியது

    கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து கடந்த 3 வருடங்களாக ரஷியா - உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது. போர் தொடங்கியபோது ரஷியா, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள பல இடங்களை கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக வலுவாக சண்டையிட ரஷிய பல இடங்களில் பின்வாங்க தொடங்கியது.

    தற்போது இரு நாடுகளும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மின்சார உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

    கடந்த மாதம் ரஷியாவில் உள்ள எண்ணெய் கிடங்குகள், ராணுவ ஆயுத கிடங்குகள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ரஷியாவுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை கீவ் பிராந்தியத்தில் உள்ள செர்னோவில் அணுமின் நிலையம் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

    இந்நிலையில், தெற்கு உக்ரைனில் உள்ள ஒரு அனல் மின் நிலையத்தின் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இந்த தாக்குதலில் ரஷ்யா 143 டிரோன்களை ஏவியதாகவும் அதில், 95 டிரோன்களை உக்ரைன் இராணுவம் சுட்டு வீழ்த்தியது என்றும் 46 டிரோன்கள் இலக்கை அடையவில்லை என்றும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

    • செர்னோவில் அணுமின் நிலையம் மீது ரஷியா டிரோன் தாக்குதல்.
    • கதிரியக்கம் வெளியாகாமல் இருக்க பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள கூரை தீப்பற்றி எரிந்தது.

    ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென உக்ரைன் மீது போர் தொடுத்தது. அதில் இருந்து சுமார் மூன்று வருடங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. போர் தொடங்கியபோது ரஷியா, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள பல இடங்களை கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக வலுவாக சண்டையிட ரஷிய பல இடங்களில் பின்வாங்க தொடங்கியது.

    தற்போது இரு நாடுகளும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மின்சார உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

    கடந்த மாதம் ரஷியாவில் உள்ள எண்ணெய் கிடங்குகள், ராணுவ ஆயுத கிடங்குகள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ரஷியாவுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை கீவ் பிராந்தியத்தில் உள்ள செர்னோவில் அணுமின் நிலையம் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    செர்னோபில் அணுமின் நிலையத்தில் உள்ள 4-வது உலையில் இருந்து கதிரியக்கம் வெளியேறாமல் இருக்க கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூரை டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகி, தீப்பற்றி எரிந்துள்ளது. நல்லவேளையாக, அணு உலையில் இருந்து கதிர்வீச்சு வெளியேறவில்லை. வழக்கமான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    1986-ம் ஆண்டு இந்த அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. உலகில் உள்ள அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட மோசமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த விபத்து காரணமாக கதிர்வீச்சு வெளியேறாத வகையில் 4-வது அணு உலைக்கு மேல் பாதுகாப்பிற்கு கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அணுஉலையில் எஞ்சியிருக்கும் கதிரியக்கம் வெளியேறாத வகையில் இந்த கூரை அமைக்கப்பட்டுள்ளது.

    உக்ரைன்- ரஷியா இடையிலான 3 வருட சண்டையில் உக்ரைனில் உள்ள நான்கு அணுமின் நிலையங்களுக்கு ஆபத்து உள்ளதாக எச்சரிக்க விடுக்கப்பட்ட்டள்ளது. இதில் தெற்கு உக்ரைனில் ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஸ்சியா அணுமின் நிலையம் ஐரோப்பியாவில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையமாகும். மேலும், உலகில் உள்ள மிகப்பெரிய 10 அணுஉலைகளில் ஒன்றாகும்.

    ×