என் மலர்
உலகம்

போர் நிறுத்தத்தை புறக்கணிக்கும் ரஷியா.. டிரம்புக்கு பயந்து புதின் சூழ்ச்சி - ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

- இந்தியப் பிரதமர், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர்கள் ரஷியா -உக்ரைன் போரை தீர்க்க நிறைய நேரம் ஒதுக்குகிறார்கள்.
- புதினிடமிருந்து மிகவும் சூழ்ச்சிகரமான வார்த்தைகளை இப்போது நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம்.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 4 வருடங்கள் முடிவடைந்த நிலையிலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.
தற்போது டிரோன்கள் மூலம் கட்டமைப்புகள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. கடந்த ஒரு வாரத்திற்குள் உக்ரைன் மீது ரஷியாவும், ரஷியா மீது உக்ரைனும் பயங்கர டிரோன் தாக்குதல் நடத்தின.
இதற்கிடையில் உக்ரைன் உடன் அமெரிக்கா 30 நாள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில் நேற்று மாஸ்கோவில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் சேர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷிய அதிபர் புதின், நம் அனைவருக்கும் போதுமான உள்நாட்டு விவகாரங்கள் உள்ளன. ஆனால் சீன அதிபர், இந்தியப் பிரதமர், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர்கள் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் இந்தப் பிரச்சினையைத்(ரஷியா -உக்ரைன் போரை) தீர்க்க நிறைய நேரம் ஒதுக்குகிறார்கள்.
அதற்காக அவர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஏனெனில் இந்த செயல்பாடு ஒரு உன்னதமான பணியை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விரோதம் மற்றும் உயிர் இழப்பை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கம்.
போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்கிறேன். விரைவில் இவ்விவகாரம் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் ஒரு தொலைபேசி உரையாடலை எதிர்நோக்கியுள்ளேன். உக்ரைன் படைகள் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ளனர். இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முன்னால் அங்கிருக்கும் படையினர் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும்.
அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கான வலுவான புரிதல் ஏற்படுத்தப்பட வேண்டும். மொத்தத்தில் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தமானது நீண்ட கால அமைதிக்கு வித்திடுவதாக இருக்க வேண்டும். நெருக்கடியின் மூல காரணங்களை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
அதிபர் புதின் போர் நிறுத்தத்துக்கு பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில் இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மாஸ்கோவில் புதினின் அறிக்கையை முழுமையற்றது. ஆனால் ரஷியா சரியானதைச் செய்யும். முன்மொழியப்பட்ட 30 நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளும் என்றும் தான் நம்புவதாகக் கூறினார்.
இதற்கிடையே புதினின் போர் நிறுத்த கருத்துக்கள் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, புதினிடமிருந்து மிகவும் சூழ்ச்சிகரமான வார்த்தைகளை இப்போது நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். உண்மையில் அவர் இப்போது போர் நிறுத்தத்தை நிராகரிக்கத் தயாராகி வருகிறார்.
இந்தப் போரைத் தொடர விரும்புவதாகவும், உக்ரேனியர்களைக் கொல்ல விரும்புவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் புதின் நேரடியாக சொல்ல பயப்படுகிறார்.
அதனால்தான் மாஸ்கோவில் அவர்கள் போர் நிறுத்தத்திற்கான முன் நிபந்தனைகளை விதிக்கிறார். அந்த நிபந்தனைகள் போர் நிறுத்தத்தை சாத்தியமற்றதாக்கும் அல்லது முடிந்தவரை ஒத்திவைக்கும் என்பதே அவரது திட்டம் என்று தெரிவித்தார்.