என் மலர்
உலகம்

267 ட்ரோன்களை ஏவி ரஷியா மிகப்பெரிய தாக்குதல்.. 4 ஆம் ஆண்டை எட்டிய உக்ரைன் போர்!

- இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் 13க்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்தன.
- அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் இன்றுடன் (பிப்ரவரி 24) ஆம் தேதியுடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறது. ஐரோப்பிய யூனியனின் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிராக ரஷியா தங்கள் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தை கூறி ரஷியா 2022இல் போரை தொடங்கியது.
இந்நிலையில் ரஷியா இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் மீது நடத்தியுள்ளது.
உக்ரைன் அதிகாரிகளின் கூற்றுப்படி, நேற்று ஒரே நாளில் ரஷியா 267 ட்ரோன்களை ஏவியது. இது இதுவரை உக்ரைன் மீது நடந்தேறாத மிகப்பெரிய வான்வழித் தாக்குதலாகும்.
இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் 13க்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்தன. அவற்றில் கார்கிவ், பொல்டாவா, சுமி, கீவ், செர்னிஹிவ், மைகோலைவ் மற்றும் ஒடெசா ஆகியவை அடங்கும்.
உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் கூறுகையில், ரஷியா ஏவிய 267 ட்ரோன்களில் 138 இடைமறிக்கப்பட்டன. இருப்பினும், இந்த தாக்குதலின் போது மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் உடன் ஏவி, உக்ரைனின் ஐந்து நகரங்களில் ரஷியா சேதம் விளைவித்தது.
இந்தத் தாக்குதலின் போது, உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு பல ரஷிய ட்ரோன்களை அழித்தது. உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் இந்த சம்பவத்தின் காணொளியை வெளியிட்டுள்ளது.
On February 23, 2025, Russia unleashed 267 drones against Ukraine, marking its largest drone assault since the start of the full-scale invasion.Ukrainian air defenses successfully downed 138 of these drones. 119 imitation drones were lost. Russia must be held accountable. pic.twitter.com/jTduUrKqdt
— MFA of Ukraine ?? (@MFA_Ukraine) February 23, 2025
முன்னதாக கடந்த சனிக்கிழமை இரவு உக்ரைனின் கிரிவி ரிஹ் நகரில் நடந்த மற்றொரு ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
ரஷியாவின் தாக்குதலை உக்ரைன் அதிபர்ஜெலென்ஸ்கி கண்டித்துள்ளார். கடந்த வாரத்தில் மட்டும் ரஷியா 1,150 ட்ரோன்கள், 1,400 க்கும் மேற்பட்ட வான்வழி வெடிகுண்டுகள் மற்றும் 35 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசியதாக அவர் தெரிவித்தார்.
உக்ரைன் போருக்கு தீர்வு காண சவுதி அரேபியாவில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அழைக்கப்படவில்லை. இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. உக்ரைனை நேட்டோ நாடுகளுடன் சேர்த்தால் தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுப்பதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.