search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    வன்முறை எதிரொலி- சுதந்திர போரில் இறந்த வீரர்களின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு ரத்து
    X

    வன்முறை எதிரொலி- சுதந்திர போரில் இறந்த வீரர்களின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு ரத்து

    • நாடு முழுவதும் போராட்டக்கார்கள் மற்றும் போலீசார் இடையே மோதல்கள் ஏற்பட்டு வன்முறை களமாக மாறியது.
    • நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போரில் பங்கேற்று உயிர் தியாம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. மாணவர்களின் போராட்டம் காரணமாக கடந்த 2018-ல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது.

    இந்த சூழலில் மீண்டும் அந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அறிவிப்பை கடந்த மாத இறுதியில் வங்காளதேச அரசு அறிவித்தது. இந்த இடஒதுக்கீடு பாரபட்சமானது எனக்கூறி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    மாணவர்களால் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த 16-ந் தேதி டாக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் மாணவர்கள் உள்பட பலர் பலியாகினர்.

    இதை தொடர்ந்து, நாடு முழுவதும் போராட்டக்கார்கள் மற்றும் போலீசார் இடையே மோதல்கள் ஏற்பட்டு வன்முறை களமாக மாறியது. இந்த வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

    வன்முறை காரணமாக வங்காளதேச அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர். பள்ளிகள், கல்லூரிகளை காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு பணிகளுக்காகவும் ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே வங்காளதேசத்தில் நிலவும் வன்முறை காரணமாக அங்குள்ள இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்புவதை மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக சிவில் விமானப்போக்குவரத்து துறை, குடியேற்றத்துறை, எல்லைச் சாவடிகள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி வங்காளதேசத்தில் 978 இந்திய மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் தெரிவித்தது.

    இந்த நிலையில் வங்காளதேசத்தில் கல்வி பயின்று வந்த தங்கள் மாநிலத்தை சேர்ந்த 120 மாணவர்கள் அங்கிருந்து திரும்பியுள்ளதாக அசாம் அரசு நேற்று அறிவித்தது.

    அதே போல் திரிபுராவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் வழியாக கடந்த 2 நாட்களில் மொத்தம் 379 மாணவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் வங்காளதேசத்தில் மாணவர்களின் போராட்டத்துக்கு காரணமான 30 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

    சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவில், "அரசுப் பணிகளில் தேர்வுகள் மூலம் தேர்ச்சியடையும் தகுதியான நபர்களுக்கு 93 சதவிகிதமும், விடுதலைப் போராட்ட வீரா்களின் குடும்பத்தினருக்கு 5 சதவிகிதமும் ஒதுக்கப்பட வேண்டும். மீதமுள்ள 2 சதவிகிதம் சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 3-ம் பாலினத்தவர்களுக்கு வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் போராட்டம் மற்றும் வன்முறை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயல்பு நிலை திரும்பும் பட்சத்தில் ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×