search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சாதிப்பாகுபாடுக்கு எதிரான மசோதாவை தடுத்த கலிபோர்னியா கவர்னர்
    X

    சாதிப்பாகுபாடுக்கு எதிரான மசோதாவை தடுத்த கலிபோர்னியா கவர்னர்

    • எஸ்பி403 சட்டத்திற்கு அம்மாநில இரு அவைகளும் ஒப்புதல் அளித்தன
    • பாகுபாட்டை களைய முன்னரே பல சட்டங்கள் உள்ளன என கவர்னர் தெரிவித்தார்

    அமெரிக்காவில் உள்ள தெற்காசிய மற்றும் இந்து மதத்தை சேர்ந்த புலம் பெயர்ந்தவர்கள் சாதிப்பாகுபாடுகளை ஊக்குவிப்பதாக கூறி, அத்தகைய நடவடிக்கைகளிலிருந்து இந்து மதத்தை சேர்ந்தவர்களை பாதுகாக்கும் வகையில் அந்நாட்டின் கலிபோர்னியா மாநில சட்டசபையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஆப்கானிஸ்தான் வம்சாவளி அமெரிக்கரான அயிசா வகாப் எனும் உறுப்பினரால் கடந்த மார்ச் 22 அன்று "எஸ்பி403" (SB403) எனும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அம்மாநில இரு அவைகளும் ஒப்புதல் அளித்தன.

    ஆனால், இம்மசோதா சட்டமாவதை அம்மாநில கவர்னர் கெவின் நியூசாம் (Gavin Newsom) தனது "வீட்டோ" (Veto) அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து விட்டார்.

    நேற்று, இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:

    கலிபோர்னியாவில் எந்த நாட்டினராக இருந்தாலும் எங்கு வாழ்ந்து வந்தாலும் அவர்கள் மரியாதையுடனும் சம உரிமையுடனும் நடத்தப்பட வேண்டும் என்பதில் நாம் எப்போதுமே உறுதியாக உள்ளோம். சாதி உள்ளிட்ட எந்த பாகுபாடுகளாலும் மக்கள் புறக்கணிக்கப்படாதிருக்கும் வகையில் பாதுகாக்க இங்கு ஏற்கெனவே பல வலுவான சட்டங்கள் உள்ளன. பாலினம், இனம், உடல் நிறம், மதம், பூர்வீகம் மற்றும் நாடு உள்ளிட்ட இதர காரணங்களுக்காக மக்களிடையே பாகுபாடு காட்டுவது இங்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த புதிய சட்டம் தேவையில்லை என கருதுவதால் நான் இதில் கையெழுத்திட போவதில்லை.

    இவ்வாறு கெவின் நியூசாம் தெரிவித்தார்.

    "சாதி எனும் சர்ச்சைக்குரிய வார்த்தையை வேண்டுமென்றே சேர்த்து, மக்களின் சிவில் உரிமைகளை தடுக்கும் முயற்சியாக இந்துக்களிடையே அச்சத்தையும் பிரிவையும் ஏற்படுத்த கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவை சட்டமாக்காமல் தடுத்ததன் மூலம் கவர்னர் நியூசாம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்திருக்கிறார்" என கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும்விதமாக அம்மாநிலத்தில் வாழும் தெற்காசிய மற்றும் இந்துமதத்தை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    ஆனால், இச்சட்டத்தை கொண்டு வர தீவிரமாக முயற்சித்து வந்த ஈக்குவாலிட்டி லேப் (Equality Lab) அமைப்பினர், சட்டசபை உறுப்பினர் வகாப், மற்றும் வேறு சில அமைப்புகள் தற்போதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    Next Story
    ×