search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சாட்ஜிபிடி நிறுவனம் மீது அமெரிக்காவில் வழக்கு: மக்களின் தரவுகளை தவறாக கையாண்டதாக குற்றச்சாட்டு
    X

    சாட்ஜிபிடி நிறுவனம் மீது அமெரிக்காவில் வழக்கு: மக்களின் தரவுகளை தவறாக கையாண்டதாக குற்றச்சாட்டு

    • எண்ணற்ற நபர்களின் பதிப்புரிமை மற்றும் தனியுரிமையை பெருமளவில் மீறியிருக்கிறது என குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
    • வலைதளங்களில் உள்ள கோடிக்கணக்கான வார்த்தைகளை வைத்து இந்த செயலியின் மென்பொருள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஒரு சட்ட நிறுவனம், சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மென்பொருள் செயலியை உருவாக்கிய ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவிருக்கிறது.

    ஓபன்ஏஐ நிறுவனம் அதன் மென்பொருள் தொழில்நுட்ப செயலியின் உருவாக்கத்திற்காக, இணையத்திலிருந்து, "டேட்டா ஸ்கிரேப்பிங்" (Data Scraping) என்ற இணையதளத்தில் உள்ள தகவல்களை எடுத்து பயன்படுத்தும் வழிமுறையை கையாண்டு, எண்ணற்ற நபர்களின் பதிப்புரிமை மற்றும் தனியுரிமையை பெருமளவில் மீறியிருக்கிறது என குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

    கோடிக்கணக்கான இணைய பயனர்களின் சமூக ஊடக கருத்துகள், வலைப்பதிவு இடுகைகள், விக்கிபீடியா வலைதளத்தின் கட்டுரைகள் மற்றும் குடும்ப சமையல் குறிப்புகள் போன்ற எண்ணற்ற தகவல்களை ஓபன்ஏஐ பயன்படுத்தும் போது அவர்களின் உரிமைகளை அது தன்னிச்சையாக மீறியிருக்கிறதா, இல்லையா என்கின்ற ஒரு புதிய கோட்பாட்டை இந்த வழக்கு பரிசோதிக்க முயல்கிறது என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    இவ்வழக்கின் பின்னணியில் உள்ள சட்ட நிறுவனமான கிளார்க்சன், தரவு மீறல்கள் முதல் தவறான விளம்பரம் வரையிலான பிரச்சனைகளில் பெரிய குழுவின் சார்பாக வழக்கு தாக்கல் செய்வதில் அனுபவமிக்க நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான ரியான் கிளார்க்சன் கூறும்போது, "அதிக சக்தி வாய்ந்த இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக, தங்களின் தகவல்கள் திருடப்பட்டவர்கள் மற்றும் வணிக ரீதியாக தங்கள் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு இவ்வழக்கில் பிரதிநிதித்துவம் கிடைத்திட எங்கள் நிறுவனம் விரும்புகிறது" என்றார்.

    மேலும், "வலைதளங்களில் உள்ள கோடிக்கணக்கான வார்த்தைகளை வைத்து இந்த செயலியின் மென்பொருள் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வார்த்தைகளுக்கு உண்மையான உரிமையாளர்கள், வலைதளங்களில் தங்கள் பதிவுகளை வெளியிடும் நபர்கள்தான். அவர்களில் எவரும் இத்தகைய ஒரு நிறுவனம் தங்கள் லாபத்திற்காக இவற்றை பயன்படுத்தி கொள்ள ஒப்புதல் வழங்கவில்லை" என ரியான் கூறியிருக்கிறார்.

    குறுகிய காலங்களிலேயே மிகவும் பிரபலமடைந்து விட்ட இந்த நிறுவனத்திற்கெதிரான இந்த வழக்கின் போக்கை தகவல் தொழில்நுட்ப ஆர்வலர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

    Next Story
    ×