search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    தைவான் அதிபர் வாழ்த்து: மோடி அளித்த பதிலுக்கு சீனா கடும் எதிர்ப்பு
    X

    தைவான் அதிபர் வாழ்த்து: மோடி அளித்த பதிலுக்கு சீனா கடும் எதிர்ப்பு

    • வேகமாக வளர்ந்து வரும் தைவான்- இந்தியா கூட்டாண்மை, நம்முடைய வர்த்தக ஒத்துழைப்பு மேம்படுவதை எதிர்பார்க்கிறோம்- தைவான் அதிபர்.
    • சீனாவுடன் ராஜாங்க ரீதியில் உறவு வைத்திருக்கும் நாடுககள் தைவான் அதிகாரிகளுடன் உரையாடுவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது- சீனா

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஜூன் 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

    3-வது முறையாக பதவி ஏற்க இருக்கும் பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தைவானில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் புதிய அதிபராக லாய் சின்-டே தேர்ந்தெடுங்கப்பட்டார்.

    அவர் பிரதமர் மோடிக்கு எக்ஸ் தளம் மூலம் வாழ்த்து தெரிவித்தார். லால் சின்-டே தனது எக்ஸ் பக்கத்தில் "தேர்தலில் வெற்றி பெற்ற உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வேகமாக வளர்ந்து வரும் தைவான்- இந்தியா கூட்டாண்மை, நம்முடைய வர்த்தக ஒத்துழைப்பு விரிவுப்படுத்துதல், இந்தோ-பசிபிக் அமைதி உள்ளிட்ட விவகாரத்தில் மேம்படுவதை எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கு மோடி நன்றி தெரிவித்து பதில் அனுப்பியிருந்தார். அதில் "உங்களுடைய அன்பார்ந்த தகவலுக்கு நன்றி. பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை நோக்கி பணியாற்ற எதிர்பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கூறியதாவது:-

    சீனாவுடன் ராஜாங்க ரீதியில் உறவு வைத்திருக்கும் நாடுககள் தைவான் அதிகாரிகளுடன் உரையாடுவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. இந்த உலகத்தில் ஒரே சீனாதான். சீனாவில் ஒருங்கிணைந்த பகுதியாக தைவான் உள்ளது. ஒரே சீனாவின் கொள்கை என்பது சர்வதேச உறவுகளில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறை மற்றும் சர்வதேச சமூகத்தில் நிலவும் ஒருமித்த கருத்து. இந்தியா இதில் தீவிர அரசியல் ஈடுபாட்டை உருவாக்கியுள்ளது. இதற்கு சீனா இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×