என் மலர்
இந்தியா
29வது நாள்: எல்லையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் விவசாயி கவலைக்கிடம் - மாரடைப்பு அபாயம்
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தர பிரதேச மற்றும் அரியானாவின் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த மாத தொடக்கம் முதலே பலமுறை டெல்லி நோக்கி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் குண்டுகளை வீசியும் தண்ணீர் பீய்ச்சியும் தாக்குதல் நடத்தினர். இருப்பினும் மத்திய அரசு செவி சாய்க்கும் வரை போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லையான கானௌரியில் பஞ்சாப் விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால்[70 வயது], நவம்பர் 26 முதல் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இன்று [டிசம்பர் 25] 29வது நாளை எட்டியுள்ளது.
உண்ணாவிரதம் தொடங்கியதில் இருந்து அவர் 15 கிலோ வரை வரை எடை குறைந்துள்ளார். புற்றுநோயாளியான தலேவால் விடாப்பிடியாக உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ள நிலையில் அவருக்கு எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு ஏற்படலாம் என்றும் உறுப்புக்கள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கடந்த வியாழன் அன்று (டிசம்பர் 19) அவர் மயங்கி விழுந்தார்.
இரத்த அழுத்தம் தொடர்ந்து குறைந்து வருவதாலும், எலக்ட்ரோலைட் சமநிலையின்மையாலும் டல்வாலின் நிலை மோசமாக உள்ளது. அவரது நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். ஆனால் அவர் எந்த வித சிகிச்சையையும் மறுத்து வருகிறார்.
விவசாயிகளின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்கும் அல்லது தனது கடைசி மூச்சு வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரும் என்ற தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்கிறார் என்று விவசாய சங்க உறுப்பினரான அவ்தார் சிங் தெரிவித்துள்ளார் . பட்டினியால் அவரது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்துள்ள அவருக்கு அதிகரித்து வரும் குளிர் காலநிலையும் சவாலாக உள்ளது.
முன்னதாக கடந்த டிசம்பர் 2 ஆம் வாரத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த தலேவால், தாம் நாட்டின் சாதாரண விவசாயி என்றும், பிப்ரவரி 13-ம் தேதி முதல் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு மத்தியில் கனத்த இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். இந்த போராட்டத்தில் நான் இறந்தால் மத்திய அரசுதான் அதற்கு பொறுப்பு. போராட்டங்கள் நடக்கும் இடத்தில் போலீசார் ஏதாவது செய்தால் அந்த பொறுப்பும் அரசின் மீதுதான் விழும் என்று எழுதியிருந்தார்.
தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாகி வரும் நிலையில் தலேவாலின் உயிரைக் காப்பாற்ற விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு ஜனாதிபதியிடம் முறையிடுவது என்று விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு ஆதராக கனௌரி மற்றும் ஷம்பு எல்லையில் மெழுகுவர்த்தி பேரணி நடந்தது. இதற்கிடையே டிசம்பர் 30-ம் தேதி பஞ்சாப் பந்த் நடத்துவதற்காக, டிசம்பர் 26-ம் தேதி கானௌரி எல்லையில் அனைத்து சமூக, வணிக, கலாச்சார மற்றும் மத அமைப்புகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.