என் மலர்
உலகம்

அமெரிக்காவுக்குள் நுழைய உயிரை பணயம் வைத்து இந்தியர்கள் பயணிக்கும் 'டாங்கி ரூட்' பற்றி தெரியுமா?

- கொலம்பியா - பனாமா எல்லையில் 'டேரியன் கேப்' எனும் சதுப்பு நிலக் காடு அமைந்துள்ளது.
- 'VIP சுரங்கப்பாதை' என்று கூறப்படும் இந்த சுரங்கப்பாதைகள் மிகவும் குறுகியது,
ஆவணங்களின்றி சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வருபவர்களை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
அவ்வாறு இந்தியாவைச் சேர்ந்த 18,000 இந்தியர்களை அமெரிக்கா கண்டறிந்துள்ளது. முதற்கட்டமாக 100க்கும் மேற்பட்டோரை ராணுவ விமானம் மூலம் அமெரிக்கா நாடுகடத்தியது. அவர்கள் பஞ்சாப் விமான நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர். அவர்களின் கை கால்கள் விலங்கிடப்பட்டு அழைத்துவரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்காதது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
உலக வல்லரசான அமெரிக்காவில் பிழைப்பதற்காக பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களும் அந்நாட்டின் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர்.
இந்தியாவைச் சேர்ந்தவர்களும் சிறந்த வாழ்க்கையை தேடி இவ்வாறு சட்டவிரோதமாக அமெரிக்கா செல்கின்றனர். அதற்கு அவர்கள் பயணிக்கும் பாதை மிகவும் ஆபத்தானது. பல நாடுகளை கடந்த பின்னரே அமெரிக்காவை அடைய முடியும். குறிப்பாக கொலம்பியா - பனாமா எல்லையில் உள்ள 'டேரியன் கேப்' என்னும் சதுப்பு நிலக் காட்டை அவர்கள் கடக்க வேண்டும்.
இவ்வாறு சட்டவிரோதமாக எல்லைகளைக் கடக்கும் எந்த ஒரு பாதையும் 'டாங்கி ரூட்' [donkey route] என்று அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தை பஞ்சாபி மொழியில் இருந்து மருவிய ஒன்று. இந்த பாதையில் மக்களை காசு வாங்கிக்கொண்டு அழைத்துச் செல்ல முகவர்கள் செயல்படுகின்றனர்.
அமெரிக்காவிற்கோ அல்லது வேறு ஐரோப்பிய நாட்டிற்கோ நுழைய விரும்பும் இந்தியர்கள், சட்டப்பூர்வ வழியால் அவ்வாறு செய்ய முடியாத நிலையில், மற்ற நாடுகள் வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய உதவும் இந்த முகவர்களுக்கு பெரும் தொகையை செலுத்துகிறார்கள்.
இந்தியக் குடிமக்களுக்கு, கயானா, பொலிவியா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் சுற்றுலா விசா எளிதாக கிடைக்கும். அதன்பின் இந்த பாதை வழியாக இந்தியர்கள் பெரும்பாலும் கொலம்பியாவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பனாமாவுடன் ஒப்பிடும்போது, கொலம்பியா, அமெரிக்க எல்லைக்கு அருகில் உள்ளது.
கொலம்பியா - பனாமா எல்லையில் உள்ள 'டேரியன் கேப்' என்னும் சதுப்பு நிலக் காடு, கரடு முரடான நிலப்பரப்பு, மாறுபட்ட தட்பவெப்பம், சிறுத்தைகள், பாம்புகள், ஏராளமான விஷ பூச்சிகள், வழிப்பறி கொள்ளையர்கள், உள்ளூர் ரவுடிகள் என பல்வேறு ஆபத்துக்களை உள்ளடக்கியது.
Reality of Donky Route...Shared by haryana's Karnal 20 Year old boy, who got Deported from US Yesterday, Reached at Home.#donkeyroute #usdeportation #Trump pic.twitter.com/iOga5HUbhf
— Vinod Katwal (@Katwal_Vinod) February 6, 2025
97 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த அடர்ந்த காட்டுப்பகுதியின் ஆபத்துகள் அனைத்திலுமிருந்து உயிரையும் உடைமைகளையும் காப்பாற்றிக்கொண்டு தப்பித்து, எட்டு முதல் பத்து நாட்களில் கோஸ்டாரிகா மற்றும் நிகரகுவாவை அடைவார்கள்.
கோஸ்டாரிகா மற்றும் நிகரகுவாவிலிருந்து, இந்தியர்கள் குவாத்தமாலா வழியாக மெக்சிகோவின் தெற்கு எல்லையை அடைகிறார்கள். இங்கிருந்து, அவர்கள் மெக்சிகோவிற்குள் நுழைந்து பின்னர் அமெரிக்காவிற்குள் நுழைகிறார்கள்.
கடந்து செல்லும் நாடுகளில் அரசியல் சூழ்நிலை, வானிலை, மனித கடத்தல் மற்றும் பிற குற்ற வழிகளைக் கருத்தில் கொண்டு, 'டாங்கி ரூட்' வழியாக அமெரிக்காவை அடைய இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆகலாம். அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையிலான எல்லைப் பகுதிகளுக்கு அருகில் பல சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
'VIP சுரங்கப்பாதை' என்று கூறப்படும் இந்த சுரங்கப்பாதை மிகவும் குறுகியது, இருண்டது, பூச்சிகள், பாம்புகள் நிரம்பியது. இது மெக்சிகோவின் சியுடாட் ஜுவாரெஸை அமெரிக்க மாகாணமான டெக்சாஸின் எல் பாசோவுடன் இணைக்கிறது.
இதைப் பயன்படுத்த கார்டெல்களுக்கு 6,000 டாலர்கள்(ரூ.5.25 லட்சத்திற்கு மேல்) கொடுக்க வேண்டும். கார்டெலுக்குப் பணத்தைச் செலுத்தியவுடன், பயணிப்பவர்களுக்கு ஒரு குறியீடு வழங்கப்படுகிறது. இது மெக்சிகோவில் உள்ள பிற கார்டெல்கள் மற்றும் போலீஸ் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க பயன்படுகிறது. இதன்மூலம் அவர்கள் அமெரிக்காவிற்குள் எளிதாக நுழைய முடியும்.