என் மலர்
உலகம்
ஈரான் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து கூந்தலை வெட்டிய சுவீடன் எம்.பி
- ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி கைதுசெய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.
- போலீஸ் தாக்குதலில் இளம்பெண் இறந்ததற்கு எதிர்த்து ஈரான் பெண்கள் தலைமுடியை வெட்டி போராட்டம் நடத்தினர்.
பெல்ஜியம்:
இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாகப் பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அந்நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்குச் சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த மாதம் 17-ம் தேதி உயிரிழந்தார். இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவிய நிலையில் போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு முயற்சித்து வருகிறது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஈரான் நாட்டில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக சுவீடன் எம்.பி. தனது தலைமுடியை வெட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈரானிய பெண்களுடனான தனது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பாராளுமன்ற விவாதத்தின் போது ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது தலைமுடியை கத்தரித்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்கள் அனைவரும் ஈரானில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என கோருகிறோம் என்றார்.