search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    காசா மீது தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம்: மேற்கு கரையில் மசூதி மீது குண்டுவீச்சு
    X

    காசா மீது தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம்: மேற்கு கரையில் மசூதி மீது குண்டுவீச்சு

    • தரைவழி தாக்குதலுக்கு முன் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம்
    • மேற்கு கரை பகுதியிலும் தாக்குதலை நடத்தியுள்ளது

    இஸ்ரேலுக்கும்- பாலஸ்தீனத்தின் காசா முனைப் பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலையடுத்து போர் பிரகடனத்தை இஸ்ரேல் அறிவித்தது.

    காசா மீது தொடர்ந்து 16-வது நாளாக இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். காசாவுக்குள் தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இஸ்ரேல் எல்லையில் வீரர்களை குவித்து உள்ளது.

    இதையடுத்து வடக்கு காசாவில் இருந்து பொது மக்களை தெற்கு காசாவுக்கு செல்லுமாறு இஸ்ரேல் அறிவுறுத்தியது. லட்சக்கணக்கானோர் வடக்கு காசாவில் இருந்து வெளியேறினர். இதற்கிடையே தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது.

    இந்த நிலையில் காசா மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. தரைவழி தாக்குதலுக்கு முன்பாக காசாவில் வான்வழி தாக்குதல்களை முடுக்கிவிட போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப்படைகளின் செய்தித்தொடர்பாளர் டேனியல் ஹகரி கூறும்போது, காசாவில் பாதுகாப்பு ஆட்சியை மாற்றுவதற்கான, மூன்று கட்ட நடவடிக்கையின் 2-ம் கட்டத்துக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது.

    தரைவழி தாக்குதலுக்கு முன்பாக சிறந்த சூழ்நிலையை உருவாக்க காசா மீதான தாக்குதல்கள் முடுக்கி விடப்பட உள்ளது. சிறந்த சூழ்நிலையில் அடுத்த கட்ட போரில் நுழைய இருக்கிறோம்.

    வான்வழி தாக்குதல்களை அதிகரிக்கிறோம். இதன் மூலம் காசாவுக்குள் நுழையும் போது ஆபத்தை குறைக்கிறோம். நாங்கள் காசா பகுதிக்குள் நுழைவோம், ஹமாஸ் அமைப்பினரின், உள்கட்டமைப்புகளை அழிப்பதற்காக செயல்பாட்டு மற்றும் தொழில்முறை பணியை தொடங்குவோம் என்றார்.

    இதன் மூலம் காசா மீதான வான்வழி தாக்குதல் தீவிரமடையும் சூழல் உள்ளது.

    பாலஸ்தீனத்தின் மேற்கு கரையிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் அங்கு இஸ்ரேல் ராணுவம் சோதனை நடத்தி பலரை கைது செய்துள்ளது.

    இந்த நிலையில் மேற்கு கரையில் உள்ள மசூதி மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கு மேற்கு கரை நகரமான ஜெனினில் உள்ள அல்-அன்சார் மசூதி மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    மசூதியில் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பினர் தஞ்சமடைந்து இருந்தனர். அவர்கள் தாக்குதல்கள் நடத்த திட்டமிடுவதற்கு அங்கு இருந்தனர் என்றும், இதனால் மசூதி வளாகத்தின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×