search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வீட்டுப்பாடம் இனி எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது: சாட்ஜிபிடி நிறுவனர் கருத்து
    X

    வீட்டுப்பாடம் இனி எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது: சாட்ஜிபிடி நிறுவனர் கருத்து

    • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதித்து வருகிறார்.
    • வேலைவாய்ப்புகளில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை என்றார்.

    "செயற்கை நுண்ணறிவு கருவிகள், கால்குலேட்டர்கள் செய்ததை போல் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும், ஆனால் கற்றலுக்கு மாற்றாக அமையாது" என்று சாட்ஜிபிடி நிறுவனர் சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ கீயோ பல்கலைக்கழகத்தில் புதிய தொழில்நுட்பத்தை ஆதரித்து மாணவர்களிடம் பேசும்போது இவ்வாறு அவர் கூறினார்.

    "அநேகமாக வீட்டுப்பாடமாக மாணவர்கள் செய்யும் கட்டுரைகள் எழுதுதல் போன்றவை இனி முன்பு இருந்தது போல் ஒரே மாதிரியாக இருக்காது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

    "எங்களிடம் கல்விக்காக ஒரு புதிய கருவி உள்ளது. வார்த்தைகளுக்கான கால்குலேட்டர் போன்றது" என்று கூறிய அவர், "நாம் மக்களுக்கு கற்பிக்கும் விதம் மாற வேண்டும். அதே போன்று நாம் மாணவர்களை மதிப்பிடும் விதமும் மாற வேண்டும்" என தெரிவித்தார்.

    மனிதர்களை போன்ற உரையாடல்கள், எழுத்து மற்றும் மொழிபெயர்ப்புகளை நொடிகளில் உருவாக்கும் திறனுடைய சாட்ஜிபிடி தொழில்நுட்பம், உலக மக்களின் கற்பனை ஆற்றலை மிகவும் கவர்ந்திழுத்திருக்கிறது. ஆனால், அதே சமயம் இது கல்வி உட்பட பல துறைகளில் பலருக்கு கவலைகளை எழுப்பியுள்ளது.

    குறிப்பாக கல்வித்துறையில் இதன் தாக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ள பலர், அனேக மாணவர்கள் தாங்களாக சிந்தித்து அசலான ஒரு படைப்பை உருவாக்குவதற்கு பதில் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதையே விரும்ப தொடங்கி விடுவார்கள் என்றும் அதே போன்று, இந்த தொழில்நுட்பத்தை ஒரு சில மாணவர்கள் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கி விடலாம் என்றும் கவலைப்படுகிறார்கள்.

    உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பானிய தலைநகருக்கு ஆல்ட்மேன் வருகை தந்திருக்கிறார். அங்கு அவர் வணிக மற்றும் அரசியல் தலைவர்களைச் சந்தித்து, ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் அவற்றை கட்டுப்படுத்த தேவைப்படும் விதிமுறைகளை வகுப்பது பற்றியும் விவாதித்து வருகிறார்.

    ஏ.ஐ.க்கான விதிமுறைகளை உருவாக்குமாறு அரசியல் தலைவர்களை தொடர்ந்து வலியுறுத்தி வரும் அவர், "இந்த தொழில்நுட்பம் தவறாகப் போனால், முற்றிலும் தவறாகிவிடும்" என்றும் எச்சரித்திருக்கிறார்.

    "இன்னும் இரண்டு ஆண்டுகளில் நம்மிடம் இருக்கப் போகும் கருவிகளுடன் ஒப்பிடும்போது நம்மிடையே தற்பொழுது உள்ள கருவிகள் மிகவும் பழமையானவை" என்று கூறிய அவர், இந்த தொழில்நுட்பத்திற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து மீண்டும் வலியுறுத்தினார்.

    ஏ.ஐ.க்கான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்புகள் குறித்து தனது அச்சத்தை மீண்டும் வலியுறுத்திய ஆல்ட்மேன், உலகத் தலைவர்களைச் சந்தித்த பிறகு, தாம் நேர்மறையாக உணர்ந்ததாக கூறினார். இருப்பினும் அவர் இச்சந்திப்புகள் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.

    "எவ்வளவு தவறு நடந்தாலும், நாங்கள் மிகவும் பொறுப்பாக இருப்போம்," என்று அவர் கூறினார்.

    "சாட்ஜிபிடியினால் ஒரு சில வேலைகள் பறிபோய்விடும்" என்ற கருத்தை அவர் ஒப்புக்கொண்ட போதிலும், மக்கள் எதிர்பார்ப்பது போல் வேலைவாய்ப்புகளில் பெரிய அளவில் தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை என்றார். புதிய வகை வேலைகள் உருவாகும் எனவும் அவர் கூறினார்.

    Next Story
    ×