search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இந்திய தேர்தல் குறித்து தவறான தகவல்: மன்னிப்பு கோரிய மெட்டா நிறுவனம்
    X

    இந்திய தேர்தல் குறித்து தவறான தகவல்: மன்னிப்பு கோரிய மெட்டா நிறுவனம்

    • இந்தக் கவனக்குறைவான தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம் என மெட்டா நிறுவனம் கூறியது.
    • மெட்டா நிறுவனத்திற்கு இந்தியா முக்கியமான நாடு என தெரிவித்தார்.

    நியூயார்க்:

    மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க், ஜோ ரோகனின் போட்காஸ்டில் சமீபத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 2024-ல் உலகம் முழுவதும் மிகப்பெரிய தேர்தல் ஆண்டாக இருந்தது. இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் தேர்தலைச் சந்தித்தன. ஆனால், ஆட்சியில் இருந்த கட்சிகள் பணவீக்கம், பொருளாதார பிரச்சனை, கோவிட்டை கையாண்டது உள்ளிட்ட ஏதாவது ஒரு விஷயம் காரணமாக ஆட்சியை பறிகொடுத்தன என தெரிவித்திருந்தார்.

    இதுதொடர்பாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகம் என்ற அடிப்படையில் 2024 ல் இந்தியாவில் நடந்த தேர்தலில் 64 கோடி வாக்காளர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீதான தங்களின் நம்பிக்கையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

    கோவிட்டிற்கு பிறகு 2024 ல் நடந்த தேர்தலில் இந்தியா உள்ளிட்ட அனைத்து அரசுகளும் தோல்வியடைந்தன என்பது தவறான தகவல்.

    80 கோடி பேருக்கு இலவச உணவு, 220 கோடி பேருக்கு இலவச தடுப்பூசி, கோவிட் காலத்தில் உலக நாடுகளுக்கு உதவி என வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா முன்னணியில் உள்ளது. பிரதமர் மோடியின் 3-வது வெற்றி என்பது சிறந்த நிர்வாகம் மற்றும் பொது மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த சான்று.

    மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் இருந்து தவறான தகவல்களைப் பார்ப்பது ஏமாற்றம் அளிக்கிறது. உண்மைகளையும், நம்பகத்தன்மையயும் நிலைநிறுத்துவோம் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், இந்திய தேர்தல் குறித்து தவறான தகவல் வெளியிட்டதற்காக மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியது.

    இதுதொடர்பாக, மெட்டா நிறுவனத்தின் இந்திய துணைத்தலைவர் ஷிவ்நாத் துக்ரால் வெளியிட்டுள்ள அறிக்கையில், மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, 2024-ல் நடந்த தேர்தல்களில் ஆட்சியில் இருந்த கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்ற மார்க் ஜூக்கர்பெர்க்கின் கருத்து பல நாடுகளில் நடந்துள்ளது. இந்தியாவிற்கு இது பொருந்தாது. இந்தக் கவனக்குறைவான தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம். மெட்டா நிறுவனத்திற்கு இந்தியா முக்கியமான நாடு. அதன் புதுமையான எதிர்காலத்தின் மையத்தில் இருப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×