என் மலர்
பாலஸ்தீனம்
- 8 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
- இதுவரை இல்லாத அளவுக்கு போர் நிறுத்தத்துக்கு மிகவும் நெருக்கத்தில் வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தூக்கத்தில் பிரிந்த உயிர்கள்
பாலஸ்தீன நாட்டின் மத்திய காசாவில் உள்ள ஸவாடியா Zawayda பகுதியில் நேற்று இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் 8 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் டஜன் கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளனர் . உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
17 Palestinians killed and dozens wounded.Israel strike central Gaza town of Zawayda.Israel issued new evacuation orders, citing Hamas rocket fire nearby.#Hamas #Israel #Gaza pic.twitter.com/Fp8zP00OOQ
— Amit Jalali (@jalali_amit) August 18, 2024
நேற்று இரவு அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இஸ்ரேலின் 3 மிசைல்கள் அந்த வீட்டின் மீது ஏவப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு அருகில் ஹமாஸ் செயல்பாடு இருந்ததாகக் கூறி இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் மத்திய காசாவில் உள்ள மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் நிர்ப்பந்தித்து வருகிறது.
அமைதிப் பேச்சுவார்த்தை
இதற்கிடையில் கத்தார் நாட்டில் உள்ள தோகாவில் அமெரிக்கா மற்றும் எகிப்து முன்னிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்துவந்த போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் பரிமாற்ற பேசுவார்த்தை நேற்று முன் தினம் [வெள்ளிக்கிழமை] தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின்போது முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டகாக தெரிகிறது. ஒப்பந்தத்தில் உள்ள சில அம்சங்களை ஹமாஸ் ஏற்க மறுத்துள்ளது.
வெற்றியா? தோல்வியா?
ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு போர் நிறுத்தத்துக்கு மிகவும் நெருக்கத்தில் வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மத்தியஸ்தர்களின் முயற்சியைப் பாராட்டுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை தாங்கள் நிராகரிக்கிறோம் என்றும், போர் நிறுத்தம் வெற்றி அடையவுள்ளது போன்ற பொய் பிம்பம் கட்டமைக்கப்படுவதாகவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
மத்திய காசா- தெற்கு லெபனான் தாக்குதல்கள்
தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பேச்சுவார்த்தை மீண்டும் அடுத்த வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் காசாவில் நேற்று இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. நேற்றைய தினம் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
- இந்த தாக்குதலில் மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பெய்ரூட்:
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
இதில் 100-க்கும் மேற்பட்டோரை இன்னும் பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால் காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த ஆயுதக்குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், தெற்கு லெபனானின் நபாட்டி பகுதியில் இஸ்ரேல் விமானப்படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதகாவும், அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
- பிறந்து 4 நாட்களே ஆன தனது இரட்டைக் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார் முகமது.
- சான்றிதழ்களை ஏந்தியவாறு முகமது கதறி அழும் வீடியோ போரின் கொடுமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 40 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். அதிலும் மொத்த குடும்பத்தையும் இழந்து தனி ஆளாக உயிர்பிழைத்தவர்களின் வலி சொல்லி மாளாதது. அதை கண்முன் நிறுத்தும் விதமாக பாலஸ்தீன தந்தை ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிறந்து 4 நாட்களே ஆன தனது இரட்டைக் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீட்டுக்கு வந்த முகமது அபு அல்- கும்சான் என்ற அந்த தந்தைக்கு தனது மனைவியும் குழந்தைகளும் இஸ்ரேலின் வான்வெளித் தாக்குதலில் இறந்துவிட்டனர் என்ற அதிர்ச்சியே மிஞ்சியது.
மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல் ஃபாலா பகுதியில் நடந்த தாக்குதலில் முகமதின் மனைவி, பிறந்து நான்கு நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகள் அசைல்[Aysel] மற்றும் அசெர் [Asser] உயிரிழந்துள்ளனர். கையில் இரண்டு பிறப்புச் சான்றிதழ்களை ஏந்தியவாறு முகமது கதறி அழும் வீடியோ போரின் கொடுமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. அரசியல் தலைவர்களும் ஆயுத வியாபாரிகளும் லாபம் அடைவதற்காக உருவாக்கப்பட்ட போர் காலங்காலமாக அப்பாவி மக்களின் தலையிலேயே விடிவது மனிதக்குலத்தின் மீள முடியாத சாபம் ஆகும்.
Palestinian man who went to get birth certificates, returned tonfind his wife and children murdered... pic.twitter.com/3qxDLe8Rji
— Southland Post (@SouthlandPost) August 14, 2024
- மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உருவாகியுள்ளது.
- இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
காசா:
மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் அபாய கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த அக்டோபர் 7-ம் தேதி முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 40,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, இஸ்ரேலுக்கு தக்க பாடம் கற்பிப்போம் என ஹமாஸ் தெரிவித்தது.
இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி எம் 90 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளோம் என ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், சிறிது நேரத்திற்கு முன் ஒரு ஏவுகணை காசா பகுதியின் எல்லையைக் கடந்து நாட்டின் மையத்தில் உள்ள கடல் பகுதியில் விழுந்தது கண்டறியப்பட்டது. இஸ்ரேலுக்குள் செல்லாத மற்றொரு ஏவுகணையும் கண்டறியப்பட்டது என தெரிவித்துள்ளது.
- இன்று அதிகாலை பஜர் எனப்படும் பகல் நேர தொழுகையில் மக்கள் ஈடுபட்டிருந்தபோது இந்த தாக்குதலானது நடந்துள்ளது
- கடந்த ஒரே வாரத்தில் 4 பள்ளிகள் மேல் மக்கள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி மீது தாக்குதல்கள் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. கிழக்கு காசாவில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டடோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று அதிகாலை பஜர் எனப்படும் பகல் நேர தொழுகையில் மக்கள் ஈடுபட்டிருந்தபோது இந்த தாக்குதலானது நடந்துள்ளது. கடந்த ஒரே வாரத்தில் 4 பள்ளிகள் மேல் மக்கள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி 2பள்ளிகளின் மேல் நடந்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். அதற்கு முந்தைய நாள் தாக்குதலில் 17 பேர் பலியாகினர்.
அதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் 2 அன்று மற்றொரு பள்ளி மீது நடந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த பள்ளிகளில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் ஒளிந்திருப்பதாக கூறி இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நியாயப்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 7 முதல் நடந்துவரும் தாக்குதல்களில் இதுவரை 40,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
- புதிய ஹமாஸ் தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் கடந்த ஜூலை 30 அன்று பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள கத்தாரில் இருந்து வந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
2 மாதங்களுக்கு முன்பே அவரது வீட்டில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வீட்டில் இருக்கும் சமயத்தில் ரிமோட் மூலம் குண்டை வெடிக்கச் செய்ததில் ஹனியேவும் அவரது பாதுகாவலரும் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் தான் இதற்குக் காரணம் என்று ஈரான் கடுங் கோபத்தில் உள்ள நிலையில் இஸ்ரேல்- ஈரான் இடையே போர் மூலம் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய ஹமாஸ் தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டுள்ளார். யாஹ்யா சின்வார் ஹமாஸ் ஆயுதக்குழுவின் காசா முனை பிரிவிற்கு மட்டும் தலைவராக இருந்து வந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்பிற்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் மீதான அக்டோபர் 7ம் தேதி தாக்குதலுக்கு திட்டமிட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினரில் யாஹ்யா சின்வாரும் முக்கிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதலில் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
இதற்கிடையில் ஹமாஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள யாஹ்யா சின்வார் அழித்தொழிக்கப்படவேண்டியவர் என்றும் ஹமாஸ் அமைப்பு உலகத்தில் இருந்தே துடைத்தெறியப்படும் என்றும் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் காட்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- இஸ்ரேல் தாக்குதலில் கர்ப்பிணியான ஓலா அட்னன் ஹர்ப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
- வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 24க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பாலஸ்தீன நகரமான காசாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் இந்த தாக்குதலில் ஆண்கள், பெண்கள் மட்டுமில்லாமல் பல குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 24க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலின் இந்த தாக்குதலால் நிறைமாத கர்ப்பிணியான ஓலா அட்னன் ஹர்ப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அதே சமயம் உயிரிழந்த பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு இதயத்துடிப்பு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.
உயிருடன் பிறந்த அந்த ஆண் குழந்தை தற்போது நலமுடன் உள்ளது. ஆனால், போர்களத்திற்கு நடுவே பிறப்பதற்கு முன்பே அந்த குழந்தை தனது தாயை இழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது.
- அல்- நஸ்ரேத் அகதி முகாமின் மீது நடந்த வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீன நகரமான காசாவின் பல்வேறு இடங்களில் நேற்று [ஜூலை 20] இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 39 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய பீரங்கிப் படைகள் ரஃபா நகரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி முன்னேறும்போது இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. உயிரிழந்தவர்களில் உள்ளூர் பத்திரிகையாளர் முகமது அபு ஜஸீர் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் அடங்குவர்.
இதனால் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று இரவு புலம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த குடியிருப்பு பகுதியின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
அல்- நஸ்ரேத் அகதி முகாமின் மீது நடந்த வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். முன்னதாக மற்றொரு முகாம் கட்டிடம் மீது மிஷைல் தாக்குதல் நடந்த நிலையில் 2 பத்திரிகையாளர் உட்பட பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் இஸ்ரேல் பீரங்கிகள் தற்போது ரஃபாவின் வடக்கு பகுதிகளை நோக்கி முன்னேறி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 38,798 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவுடன் கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் முன்முயற்சியில் மேற்கொள்ளப்பட்டஇஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்த அமைதிப்பேச்சுவார்தைகள் தோல்விமுகத்தில் உள்ளன. இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இந்த வாரம் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க தூதரகத்தின் அருகே இன்று அதிகாலை வான்வழியாக டிரோன் தாக்குதல் நடந்துள்ளது.
- பாலஸ்தீனம் மெது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 38,848 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 89,459 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் அபாயகரமான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இஸ்ரேல் நகரமான டெல் அவிவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே இன்று அதிகாலை வான்வழியாக டிரோன் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஏமனைச் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
இன்று [ஜூலை 19] அதிகாலை 3.15 மணியளவில் டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் பென் யகுதா மற்றும் ஸலோம் அலெய்கெம் தெருக்கள் சந்திக்கும் இடத்தில் உள்ள கட்டிடத்தின் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடந்துள்ளது. இந்த வான்வெளித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான கட்டடம் அமெரிக்க தூதரக கட்டடத்துக்கு வெகு அருகாமையில் உள்ளது.
இதற்கிடையில் காசா நகரில் இயங்கி வரும் அமெரிக்க பள்ளி மீதும், 2 அகதி முகாம்கள் மீதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 38,848 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 89,459 பேர் படுகாயமடைந்துள்ளனர். அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கான் யூனிஸ், ரஃபாவில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
- மத்திய காசாவில் 10 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மறுபக்கம் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
திங்கட்கிழமை நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மத்திய காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
நுசெய்ரத் மற்றும் ஜவைடா ஆகிய இரண்டு இடங்களில் நடத்திய தாக்குதலில் 10 பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த வாரம் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ராணுவ தலைவர் முகமது தெய்ஃப்-ஐ குறிவைத்து தாக்குதல் நடத்தியில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பின்னரும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பரிந்துரையை வழங்க ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மத்திய காசா மீது இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. காசா மீதான கொடூர தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரவும், ஹமாஸ் அமைப்பிடம் சிக்கியுள்ள 120 பிணைக்கைதிகளை விடுவிக்கவும் சர்வதேச மத்தஸ்தர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தாக்குதல் மக்கள் வசித்து வந்த நான்கு வீடுகள் மீது நடத்தப்பட்டதாக அவசர பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய காசாவில் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கொண்டு விரிவாக இந்த தாக்குதல் குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.
தெற்கு காசாவில் திங்கட்கிழமை (நேற்று) இரவு இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
- கடந்த 2014 ஆம் ஆண்டு காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் முகமது டெய்ஃப் இன் மனைவி, 7 வயது மகன் மற்றும் 3 வயது மகள் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
- 90 பேரைக் கொன்று அவர் மீது இஸ்ரேல் நடத்திய 8வது கொலை முயற்சியில் அவர் உயிரிழந்தாரா என்பதும் மர்மமாகவே உள்ளது.
பாலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்து பாலஸ்தீனத்தின் காசா மற்றும் ரஃபா நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 8 மாதங்களாக நடக்கும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 38,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 7 தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ராணுவத் தளபதி முகமது டெய்ஃப் கான் யூனிஸ் பகுதியில் பதுங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு இன்டலிஜென்ஸ் மூலம் தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் 90 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் முகமது டெய்ஃப் கொல்லப்பட்டாரா என்று உறுதிசெய்யப்படவில்லை.
தற்போது 58 வயதான 'முகமது டெய்ஃப்' என்று அழைக்கப்படும் முகமது டெய்ஃப் இப்ராஹிம் அல் மஸ்ரியை கொல்ல முயற்சித்து இஸ்ரேல் இதுவரை 7 முறை தாக்குதல் நடத்தி தோல்வியடைந்துள்ளது. நேற்று நடந்துள்ள தாக்குதல் அவர் மீதான எட்டாவது கொலை முயற்சி ஆகும். முகமது டெய்ஃப் ஐ கொல்வது இந்த போரில் இஸ்ரேலின் முக்கிய இலக்காக உள்ளது.
1948 ஆம் ஆண்டு வாக்கில் இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்காக பெருமபாலான பாலஸ்தீன மக்கள் அவர்களது வீடுகளிலிருந்து துரத்தப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் சொந்த நாட்டுக்குளேயே அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர். அப்படி கான் யூனிஸ் நகரில் தஞ்சமடைந்து வாழ்ந்துவந்த தாய் தந்தைக்கு 1965 ஆண்டில் அகதி முகாமில் வைத்து பிறந்தவர் முகமது டெய்ஃப். காசாவின் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்ற டெய்ஃப் 1987 வாக்கில் அப்போதைய பாலஸ்தீனிய இளைஞர்கள் பலர் செய்ததைப் போலவே தங்களை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலை எதிர்க்க உருவான ஹமாஸ் அமைப்பில் சேர்ந்தார்.
தற்போதய ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாருக்கு நெருக்கமானவராக இருக்கும் டெய்ஃப் ராணுவ விவகாரங்களில் திறனுடையவராக இருந்தார். 1989 இல் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறையில் இருந்தார். அதன்பின்னர் 90 களில் அமைதிப் பேசுவார்த்தையை ஏற்காமல் ஹமாஸ் தலைவர்களை படுகொலை இஸ்ரேல் படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் வகையில் பல தற்கொலை தாக்குதலைகளை திட்டமிட்டு அரங்கேற்றினார். அவர் மீதான இஸ்ரேலின் கடந்தகால தாக்குதலைகளில் தனது ஒரு ஒரு புற கண்ணை டெய்ஃப் இழந்ததாக ஹமாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல முறை படுகாயமடைந்து மீண்டுள்ளார் டெய்ஃப். சிலர் அவர் வீல் சேரில் தான் இருப்பதாக கூறுகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் முகமது டெய்ஃப் இன் மனைவி, 7 வயது மகன் மற்றும் 3 வயது மகள் ஆகியோர் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் ரகசிய சுரங்கபாதைகள் அமைப்பது, ராக்கெட்டுகள் உருவாக்குவது, வீரர்களுக்கு பயிற்சியளிப்பது என ஹமாஸின் ராணுவத்தை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டார் முகமது டெய்ஃப். இதன் உச்சமாகவே கடந்தஅக்டோபர் 7 தாக்குதலை திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளார்.
முகமது டெய்ஃப் தனது 20 களில் இருந்த புகைப்படமும், சமீபத்திய புகைப்படம் ஒன்றும், தாக்குதலுக்கு பின் கிடைத்த அவரின் ஆடியோ செய்தியில் உள்ள குரல் மட்டுமே வெளியுலகிற்கு அவரைப் பற்றி கிடைத்த சொற்ப ஆதரங்களாகும். இந்நிலையில் 90 பேரைக் கொன்று அவர் மீது இஸ்ரேல் நடத்திய 8வது கொலை முயற்சியில் அவர் உயிரிழந்தாரா என்பதும் மர்மமாகவே உள்ளது.
- அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தெய்ஃப் முகமது.
- சுரங்கத்தில் மறைந்து இருந்த நிலையில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. எல்லையை ஒட்டியுள்ள பகுதி மீது தாக்குதல் நடத்தியது. அதன்பின் காசாவின் தெற்குப் பகுதியிலும் தாக்குதல் நடத்தியது.
ரஃபா நகருக்கு அடுத்தப்படியாக கருதப்படும் கான் யூனிஸ் நகர் இஸ்ரேல் தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமாகியது. அங்கு ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்டியதாக கூறியது. பின்னர் அங்கு பாதுகாப்பான ஒரு பகுதியை உருவாக்கியதாக இஸ்ரேல் கூறியது. ரஃபா பகுதியில் இருந்து மக்கள் அந்த பகுதிக்க செல்லுமாறு எச்சரித்தது.
இந்த நிலையில் அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மூளையாக செயல்பட்டவர் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தெய்ஃப் எனக் கருதப்படுகிறது. இவர் கான் யூனிஸ் அருகே உள்ள அல்-மவாசி பகுதியில் சுரங்கத்தில் மறைந்து இருந்ததாக தெரிகிறது.
இதை அறிந்து கொண்ட இஸ்ரேல் அந்த பகுதியில் வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 71 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம் மீது ஆர்வம் காட்டவில்லை என்பது காண்பிக்கிறது என ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்ட நிலையில், 289 பேர் காயம் அடைந்துள்ளனர். கத்தார் மற்றும் எகிப்தில் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ள குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் காலன்ட் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.
முகமது தெய்ஃப் இஸ்ரேலின் தேடப்படும் பட்டியலில் முக்கிய நபராக இருந்தார். இஸ்ரேலின் பல தாக்குதலில் உயிர்தப்பினார். தற்போதைய இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தாரா? என்பது தெளிவாகவில்லை.