என் மலர்
உலகம்
தென் கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றம் ஒப்புதல்.. அடுத்தது என்ன?
- இரண்டாவது முறையாக யூன் பதவிநீக்கம் தொடர்பாக புதிய தீர்மானத்தை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கொண்டு வந்துள்ளது.
- தீர்மானத்துக்கு ஆதரவாக 204 வாக்குகளும், எதிராக 85 வாக்குகளும் பதிவாகின.
அவசர நிலை
பட்ஜெட் மசோதாவை எதிர்க்கட்சிகள் ஆதரிக்காததால் தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை வாபஸ் பெற்றார். 45 வருட தென் கோரிய அரசியல் வரலாற்றில் அவசர நிலை பிரகடனப்படுத்தபட்டது இதுவே முதல் முறை ஆகும்.
பின்னர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் யூன் சுக் இயோல் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அவருக்கு எதிரான தீர்மானத்தைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.
பதவி நீக்கம்
ஆனால் ஆளும் கட்சி புறக்கணித்ததால் தீர்மானம் தோல்வி அடைந்தது. ஆனால் மக்களிடையே வலுக்கும் எதிர்ப்பால் சொந்த கட்சியினரே யூனுக்கு எதிராக திரும்பியுள்ளனர். இதற்கிடையே இரண்டாவது முறையாக யூன் பதவிநீக்கம் தொடர்பாக புதிய தீர்மானத்தை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கொண்டு வந்துள்ளது.
இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு இன்று [சனிக்கிழமை] தென் கொரிய பாராளுமன்றத்தில் நடைபெற்றது. பாராளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் யூன்-க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
வாக்கெடுப்பில் மொத்தம் 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் தீர்மானத்துக்கு ஆதரவாக 204 வாக்குகளும், எதிராக 85 வாக்குகளும் பதிவாகின. 3 பேர் வாக்களிக்க மறுத்தனர். 8 வாக்குகள் செல்லாததாயின.
இதன்படி தீர்மானத்துக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பதிவாகியுள்ளதால் யூன் சுக் பாராளுமன்றத்தால் ஒருமனதாக பதவிநீக்கம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
BREAKING: South Korea's parliament has voted to impeach President Yoon Suk Yeol over his December 3 martial law declaration.Huge cheers outside the main chamber. pic.twitter.com/5ZswihakQM
— Raphael Rashid (@koryodynasty) December 14, 2024
அடுத்தது என்ன?
ஆனால் இதனால் யூன் உடனே பதவியை விட்டு விலகமாட்டார். தென் கொரிய சட்டப்படி, இந்த வெற்றி பெற்ற தீர்மானம் தொடர்பாக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால், பதவி நீக்கம் முற்றிலுமாக செயல்பாட்டுக்கு வர பல வாரங்கள் ஆகும்.
நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகளில் ஆறு பேர் பதவி நீக்கத்தை உறுதிப்படுத்தி வாக்களித்தால், யூன் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார். யூனை பதவி நீக்கம் செய்வதா அல்லது வேண்டாமா என்பது குறித்து தீர்ப்பளிக்க நீதிமன்றத்திற்கு 180 நாட்கள் வரை அவகாசம் உள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்தில் யூன் சுக் நியமித்த பிரதமர் ஹான் டக்-சூ, அரசாங்கத்தின் செயல் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.