search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பிரதமர் மோடி-டிரம்ப் இன்று பேச்சுவார்த்தை: சட்டவிரோத குடியேற்றம்-வரி விதிப்பு குறித்து முக்கிய ஆலோசனை
    X

    பிரதமர் மோடி-டிரம்ப் இன்று பேச்சுவார்த்தை: சட்டவிரோத குடியேற்றம்-வரி விதிப்பு குறித்து முக்கிய ஆலோசனை

    • இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    • இந்தியாவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்ப்பு.

    வாஷிங்டன்:

    பிரதமர் மோடி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக கடந்த 10-ந்தேதி புறப்பட்டார்.

    முதலில் பிரான்சுக்கு சென்ற அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பாரீசில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டுக்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரானுடன் மோடி தலைமை தாங்கி னார்.

    மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாட்டு தலை வர்களை சந்தித்து பேசி னார். 14-வது இந்தியா- பிரான்ஸ் தலைமை செயல் அதிகாரிகளின் மன்ற மாநாட்டில் பங்கேற்று பேசினார். பின்னர் பிரான்ஸ் அதிபர் மெக்ரானுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பின்னர் தனது 3 நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அப்போது பிரான்ஸ் அதிபர் மெக்ரான் விமான நிலையத்துக்கு நேரில் சென்று மோடியை வழியனுப்பி வைத்தார்.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதற்கு அவரை தொலைபேசியில் மோடி தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது மோடியை அமெரிக்காவுக்கு வருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.

    தனி விமானம் மூலம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு இந்திய நேரப்படி இன்று அதிகாலை மோடி சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரதமர் மோடியை அமெரிக்க உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள அதிபரின் விருந்தினர் மாளிகையான பிளேர் மாளிகைக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது அங்கு மோடியை வரவேற்க அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏராளமானோர் திரண்டி ருந்தனர். அவர்கள் இந்திய-அமெரிக்க கொடிகளை அசைத்தபடி 'பாரத் மாதா கி ஜெய்', 'வந்தே மாதரம்' 'மோடி மோடி' என கோஷமிட்டு உற்சாகத்துடன் மோடியை வரவேற்றனர். அவர்களுடன் மோடி கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இதுதொடர்பாக மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, வாஷிங்டனுக்கு சென்றடைந்தேன். அதிபர் டிரம்பை சந்தித்து இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான உலகளாவிய கூட்டாண்மையை கட்டி எழுப்ப ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    நமது மக்களின் நலனுக்காகவும், நமது கிரகத்தின் சிறந்த எதிர்காலத்திற்காகவும் நமது நாடுகள் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும்.

    கடும் குளிர் இருந்த போதிலும், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் எனக்கு மிகவும் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

    பின்னர் பிரதமர் மோடி, பிளேர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டார்.

    இன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பு இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதில் முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளி யேற்றும் நடவடிக்கையை டிரம்ப் எடுத்து வருகிறார். சமீபத்தில் 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    எனவே சட்டவிரோத குடியேற்றம் குறித்து விவா திக்க உள்ளனர். அதேபோல் எக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவுக்கு இந்தியா அதிகளவில் எக்கு, அலுமினியம் ஏற்றுமதி செய்கிறது. இதையடுத்து அதன் மீதான வரி விதிப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும்.

    இந்தியா மீது வரி சலுகை அளிக்கவும் வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் இந்தோ-பசிபிக், உக்ரைன்-ரஷியா போர், மேற்கு ஆசியா நிலைமை குறித்தும் விவாதிக்கிறார்கள்.

    மேலும் உலக பணக்காரரான எலான் மஸ்க்கை மோடி சந்திக்க உள்ளார். அதேபோல் பிரபல தொழில் அதிபர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே நெருங்கிய நட்பு உள்ளது. பல சந்தர்ப்பங்களில் மோடியை டிரம்ப் வெகுவாக பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2-வது முறையாக அதிபராக பதவியேற்ற டிரம்ப், பல நாடுகள் மீது வரிகளை விதித்து வருகிறார்.

    இந்த நிலையில் அவரை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பு இரு நாடுகள் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் மேலும் ஒரு மைல்கல்லை அடையும் என்றும் இந்தியாவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×