search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல்: வாக்கை பதிவுசெய்த நவாஸ் ஷெரீப்
    X

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல்: வாக்கை பதிவுசெய்த நவாஸ் ஷெரீப்

    • பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றது.
    • மக்கள் வாக்களிக்க ஏதுவாக அங்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    லாகூர்:

    பாகிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி மொத்தம் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தெரிகிறது. இவர்கள் வாக்களிக்க நாடுமுழுவதும் 9 லட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் எந்தவித இடையூறும் இன்றி வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தலில் பல்வேறு கட்சிகள் களம் இறங்கி இருந்தாலும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி,பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான்கா னின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகி யவை இடையே போட்டி நிலவுகிறது.

    இதில் நவாஸ் ஷெரீப் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது கட்சி 115 முதல் 132 இடங்களை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், லாகூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

    பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால் நாடு முழுவதும் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் விரைவில் எண்ணும் பணி தொடங்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தேர்தலையொட்டி போலீசார், சிறப்பு ஆயுதப்படை வீரர்கள், ராணுவ வீரர்கள் என சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×